

சென்னை
அடையாறில் நேற்றிரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
சென்னை அடையாறிலிருந்து மத்திய கைலாஷ் செல்லும் பாதையில் படேல் சாலையில் இன்று அதிகாலை வேகமாக ஒரு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை. ஓட்டுநரும், ஸ்டாஃப் நர்ஸ் மட்டும் இருந்துள்ளனர்.
வேகமாகச் சென்ற ஆம்புலன்ஸின் ஓட்டுநர் அசதியால் கண் அயர்ந்துவிட்டார். அந்த நேரம் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் சாலையின் குறுக்கே பல்டி அடித்து கவிழ்ந்தது.
இதில் ஆம்புலன்ஸில் பயணித்த நர்ஸுக்கு தலை மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டது. ஓட்டுநரும் காயமடைந்தார். பிரதான சாலையில் குறுக்கே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் கவிழ்ந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தள்ளி முதல்வர் அமெரிக்காவிலிருந்து அவ்வழியாக இல்லம் திரும்புவதை ஒட்டி பாதுகாப்பில் இருந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு ஆம்புலன்ஸ் தூக்கி நிறுத்தப்பட்டது. கீழே கவிழ்ந்ததால் ஆம்புலன்ஸ் பலத்த சேதமடைந்தது. காயம்பட்ட ஓட்டுநர், நர்ஸ் இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
நள்ளிரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த நேரம் அதிர்ஷ்டவசமாக அங்கே வாகனங்களோ, பொதுமக்களோ இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.