வில்லிவாக்கத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் வெட்டிக்கொலை: ரயில்வே சங்க நிர்வாகி கொலைக்குப் பழி தீர்த்த உறவினர்கள்

புதியவன், கொலை செய்யப்பட்ட பாஸ்கர்
புதியவன், கொலை செய்யப்பட்ட பாஸ்கர்
Updated on
1 min read

சென்னை

வில்லிவாக்கத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், முன்னர் அவர் செய்த கொலைக்குப் பழி வாங்கும் விதமாக கொல்லப்பட்டவரின் உறவுக்கார இளைஞர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

வில்லிவாக்கம் பலராமபுரம், அறிஞர் அண்ணா தெருவில் வசித்துவந்தவர் பாஸ்கர் (42). இவர் வில்லிவாக்கம் பாட்டையா தெருவில் வசித்துவந்த தென்னக ரயில்வே யூனியன் AIOBC ன் பொதுச் செயலாளராக இருந்த புதியவன் (51) என்பவரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, பாஸ்கர் அவரது தம்பி ஜெகதீஸ் என்பவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தர புதியவனிடம் உதவி கேட்க அவரும் வாங்கித் தருவதாகக் கூற அதன் அடிப்படையில் வேலைக்காக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் புதியவன் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரது நண்பர் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி புதியவன் வீட்டிற்குச் சென்று பணம் கேட்க, அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் புதியவனைக் கொலை செய்துவிட்டு பாஸ்கர் தப்பி ஓடினார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பாஸ்கர் மீது 302,336,427, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில் வேலை முடிந்த பாஸ்கர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வில்லிவாக்கம் பலராமபுரம் 4 -வது தெரு வழியே நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த சில நபர்கள் பாஸ்கரின் முகத்தில் ஸ்பிரே அடித்துள்ளனர்.

எதிர்பாராமல் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதால் பாஸ்கர் நிலைகுலைந்து போனார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்தக் கும்பல் பாஸ்கரை சரமாரியாக வெட்டியது. இதில் அவரின் முகம் மற்றும் இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீஸார் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் பாஸ்கரைக் கொலை செய்தவர்களில் இருவர், கடந்த ஆண்டு பாஸ்கரால் கொலை செய்யப்பட்ட ரயில்வே சங்க நிர்வாகி புதியவனின் அக்கா மகன்களான சூரப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ், மற்றும் சுகன் என்று தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து வில்லிவாக்கம் போலீஸார் ஐபிசி பிரிவு 341, 302 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in