

டி.ஜி.ரகுபதி
கோவை
பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வால், பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் செய்வதால், கோவையில் ‘போக்ஸோ’ வழக்குகள் பதிவு அதிகரித்துள்ளது.
சமீப காலமாக பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல் அதிகரித்துள்ளது. மாறிவரும் பழக்க வழக்கம், செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, தகாத வீடியோக்கள் பார்த்தல், சமூக வலைதளங்கள் மூலம் தெரியவரும் விவரங்கள் போன்றவற்றின் விளைவாக பாலியல் ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் கொடுமையில் இருந்து பெண்கள், சிறுமிகள், குழந்தைகளை காக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், பெண்கள் அமைப்பினர் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. மாநகர காவல்துறையில் கூடுதல் துணை ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறையில் கூடுதல் எஸ்.பி தலைமையிலும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு’ உள்ளது. மானபங்கம், பாலியல் தொல்லை, சில்மிஷம், பலாத்காரம் போன்றவை தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகாருக்குள்ளாகும் நபர்கள் ‘போக்ஸோ’ உள்ளிட்ட தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்யப்படுகின்றனர்.
மாநகர காவல்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு ‘போக்ஸோ’ சட்டப்பிரிவுகளின் கீழ் 23 வழக்குகள் பதியப்பட்டு, 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ‘போக்ஸோ’ சட்டப்பிரிவின் கீழ் 20 வழக்குகள் பதியப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் 34 வழக்குகள் பதியப்பட்டு, 39 பேர் கைது செய்யப்பட்டனர். நடப்பு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் 34 வழக்குகள் பதியப்பட்டு, 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகி பிரியங்கா, வழக்கு பணியாளர் தேன்மொழி ஆகியோர் கூறும்போது, ‘‘இச்சேவை மையத்தின் சார்பில், மாவட்டத்தில் இதுவரை 159 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். பாலியல் சார்ந்த குற்றங்கள், நல்ல தொடுதல், தவறான தொடுதல், பாலியல் தொந்தரவுகள் இருந்தால் யாரிடம் தெரிவிக்க வேண்டும், காதல் வார்த்தை கூறும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இளம் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தனிமையை விரும்பும் குழந்தைகள், சிறுமிகள், மகள்களிடம் பெற்றோர் இயல்பாக பேச்சுக் கொடுத்து, அவர்களது குறையை கேட்க வேண்டும். இளம் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டால், பயப்படாமல் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்’’ என்றனர்.
மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறும்போது, ‘‘தொடர் விழிப்புணர்வு காரணமாக, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி புகார் அளித்து வருகின்றனர். பாலியல் வழக்குகளில் சிக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்களது இளம்பெண்கள், குழந்தைளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.
மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பாலியல் புகாருக்கு உள்ளாகும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றனர்.