

ராமநாதபுரம்,
உச்சிப்புளி அருகே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரமேஷ். இவரது மகன் கார்த்தீஸ்வரன் (13). இவர் கல்கிணற்றுவலசை அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) காலை மாணவர் கார்த்தீஸ்வரன் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் சுவிட்சை இயக்கியுள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்தார். உடனடியாக கார்த்தீஸ்வரனை மீட்டு ஆசிரியை ஒருவர் 2 மாணவர்கள் உதவியுடன் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர், மாணவர் மின்சாரம் பாய்ந்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து உச்சிப்புளி போலீஸார், கார்த்தீஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ராமேசுவரம் டிஎஸ்பி மகேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் ஒருவர் மின் மோட்டாரை இயக்கச் சொன்னதாகவும், அதன்படி மோட்டாரின் சுவிட்சை மாணவர் கார்த்தீஸ்வரன் இயக்கியபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவர் கார்த்தீஸ்வரனுக்கு ஹேமா ஸ்ரீ(10) என்ற சகோதரி ஒருவர் மட்டும் உள்ளார். இவரும் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- கி.தனபால்