Published : 03 Sep 2019 01:05 PM
Last Updated : 03 Sep 2019 01:05 PM

5 பேர் கொடூரக் கொலை; கர்நாடக சிறையிலிருந்து தப்பிய தூக்கு தண்டனைக் கைதி : 5 மாதத்துக்குப் பின் ஈரோட்டில் கைது

பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதை தட்டிக்கேட்ட இரண்டு தம்பதிகளையும், குழந்தையையும் கொடூரமாகக் கொலை செய்த தூக்கு தண்டனைக் கைதி கர்நாடக சிறையில் இருந்து தப்பிச் சென்றார். 5 மாத தேடலுக்குப் பின் அவர் சிக்கினார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள அரலே கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்தார்.இவருடன் ஈரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் அவரது மனைவி சிலம்மா, காசி, அவரது மனைவி ராஜம்மா உள்பட 15 பேர் வேலை பார்த்தனர். முருகேசன் சரியான நடத்தை உள்ளவர் அல்ல. அவர் சிலம்மா, ராஜம்மாவிடம் தவறாக நடக்க முயன்றார். இதை அவர்களின் கணவர்கள் ராஜேந்திரன் மற்றும் காசி ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த முருகேசன் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி ராஜேந்திரன், ராஜம்மா, சிலம்மா, காசி, மகள் ரோஜா ஆகிய 5 பேரையும் வெட்டிக் கொலை செய்தார்.

5 பேரைக் கொன்ற குற்றவாளி முருகேசனை கர்நாடக மாநிலம் பெல்காம் போலீஸார் கைது செய்தனர். வழக்கு நடந்து முருகேசனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெல்காவி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு போலீஸார் சென்றதால் சிறையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி மார்ச் 22-ம் தேதி முருகேசன் தப்பினார். சிறையில் இருந்த முருகேசன் திடீரென்று காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சிறை முழுவதும் தேடினர். முருகேசன் தப்பிச் சென்றதை அடுத்து அவரை கர்நாடக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

பக்கத்து மாநிலமான தமிழகத்துக்கும் முருகேசனின் புகைப்படம் மற்றும் அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருந்தனர். முருகேசனின் மகன் ஈரோடு மாவட்டம் அனுமன் பள்ளி மிளகாய் பாறையில் வசிக்கிறார்.

அவரது செல்போன் அழைப்புகளை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதில் சமீபத்தில் முருகேசன் பேசினார். இதையடுத்து ஈரோடு கொளத்தூர் போலீஸார் முருகேசனைப் பிடிக்க வலைவிரித்துக் காத்திருந்தனர்.

தனது மகனைப் பார்ப்பதற்காக முருகேசன் நேற்று வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கொளத்தூர் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். 5 மாதங்களுக்குப் பின் அவர் பிடிபட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிரான்சிட் வாரண்ட் பெற்று விரைவில் கர்நாடக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x