

சென்னை
சென்னை தரமணியில் உத்தரப் பிரதேச பெண் தங்கியிருந்த ஓட்டல் அறையில், சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்லாத 1000 ரூபாய் நோட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தரமணியில் எஸ்ஆர்பி டூல்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிரபல ஓட்டலில் அல்கா சர்மா (58) என்ற பெண் 2 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளார். அவர் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர்.
அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததால், ஓட்டல் மேலாளர் நிரஞ்சன் இதுகுறித்து தரமணி காவல் நிலைய போலீஸாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை தகவல் கொடுத்தார். இதையடுத்து, தரமணி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் ஓட்டலுக்கு சென்றனர். அல்கா சர்மா தங்கியிருந்த அறை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000 நோட்டுக் கட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.19.96 லட்சம் ஆகும். பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அல்கா சர்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000 நோட்டு கட்டு கள் இதுவரை எங்கு வைக்கப்பட்டிருந்தது, தற் போது யாருக்காக கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.