Published : 31 Aug 2019 15:52 pm

Updated : 31 Aug 2019 15:52 pm

 

Published : 31 Aug 2019 03:52 PM
Last Updated : 31 Aug 2019 03:52 PM

நண்பனைக் கடத்தி ரூ.3 கோடி பிணையத் தொகை கேட்ட கல்லூரி மாணவர்கள்: காகித நோட்டுகளைக் கொடுத்து லாவகமாகப் பிடித்த போலீஸ்

college-students-who-kidnap-a-friend-and-ask-for-rs-3-crore-ransom-cops-giving-out-paper-notes

வேலூர்,

வேலூர் சத்துவாச்சேரியில் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துவந்த பொறியாளரின் மகனை, சக நண்பர்களே கடத்தி விடுவிக்க 3 கோடி ரூபாய் பிணையத்தொகை கேட்டனர். சாமர்த்தியமாக காகித நோட்டுகளைக் கொடுத்து அவர்களை சில மணி நேரத்தில் போலீஸார் அதிரடியாகப் பிடித்தனர்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் கென்னடி(45). வெளிநாட்டில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். வசதியான குடும்பம். இவரது மகன் கோகுல் (19) அதே பகுதியிலுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு திரும்ப வேண்டிய கோகுல் வீடு திரும்பவில்லை.

இதனால் பயந்துபோன அவரது தாயார் மகனின் செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் தனது உறவினர்களுக்கும், கோகுலின் நண்பர்களுக்கும் போன் செய்து விசாரித்துள்ளார். இதனிடையே கோகுலின் தாயாருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய மர்ம நபர், ''உங்கள் மகனை நாங்கள் கடத்தியிருக்கிறோம், அவன் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.3 கோடி ரூபாய் பணம் தரவேண்டும். போலீஸுக்கு போனால் மகனை உயிரோடு பார்க்க முடியாது'' என சினிமா வில்லன் பாணியில் மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மாணவன் கடத்தப்பட்டது குறித்தும் கடத்தல் நபர்கள் ரூ.3 கோடி கேட்டு மிரட்டுவது குறித்தும் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மாணவர் கடத்தப்பட்டது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் 3 தனிப்படைகளை அமைத்து கடத்தல்காரர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். போலீஸார் ரகசியமாக கடத்தல்காரர்களுக்கு வலை விரித்துக் காத்திருந்தனர். போன் கால்கள் டிராக் செய்யப்பட்ட நிலையில் தயாராக இருந்தன.

அப்போது போன் வந்தது. இம்முறை சற்று இறங்கிப் பேசிய நபர், ''பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா'' என்று கேட்டுள்ளார். அவ்வளவு தொகை எங்களிடம் இல்லை என தாயாரை போலீஸார் சொல்லவைத்தனர். அப்ப எவ்வளவுதான் தருவீர்கள் என கடத்தல்காரர்கள் பேரம் பேசினர்.

ஒரு கட்டத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா' படப்பாணியில் டெம்போ எல்லாம் வச்சி கடத்தியிருக்கிறோம். ஒரு ஐந்து லட்சமாவது தாருங்கள், உங்களால் அது முடியும் என கடத்தல்காரர்கள் இறங்கிவர இதற்குமேல் இழுத்தால் சந்தேகப்படுவார்கள் என சரி என கோகுலின் தாயாரை போலீஸார் சம்மதிக்கச் சொல்லியுள்ளனர்.

அவரும் ஒப்புக்கொள்ள பிணையாகக் கேட்ட தொகையை ஒரு பையில் போட்டு வள்ளிமலை கூட்டுரோடு அருகே பணப்பையை வந்து கொடுத்துவிட்டு உங்கள் மகனை அழைத்துச் செல்லலாம் எனக் கூறியுள்ளனர். இப்படி இறங்கி வருகிறார்கள் என்றால் அப்ரண்டீஸ்களாகத்தான் இருக்கவேண்டும், தொழில்முறைக் கடத்தல்காரர்கள் இல்லை என போலீஸார் ஊகித்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸார், ரூபாய் நோட்டு கட்டுகள்போல் மேலும் கீழும் உண்மையான நோட்டுகளை வைத்து, உள்ளே அழகாக வெட்டப்பட்ட வெள்ளைக் காகிதங்களை வைத்து பணப்பையைத் தயார் செய்து கோகுலின் தாயாரிடம் கொடுத்து அனுப்பி மறைவாகக் காத்திருந்தனர்.

மாணவனின் தாயார் கடத்தல் கும்பல் கூறிய இடத்தில் பையை வைத்துவிட்டு வந்தார். அந்தப்பகுதியில் தனிப்படை போலீஸார் ஷேடோ அமைத்து மறைந்திருந்தனர். சற்று நேரத்தில் அங்கு கார் ஒன்று வந்தது. அதில் வந்த கடத்தல் கும்பல் பணப்பையை எடுத்து திறந்து பார்த்துவிட்டு பணம் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டு மாணவன் கோகுலை காரிலிருந்து இறக்கிவிட்டுக் காரை எடுத்துச் சென்றனர்.

மாணவனை மீட்ட போலீஸார் காரை மடக்கிப் பிடித்து கடத்தல் கும்பலையும் பிடித்தனர். யார் அந்த அப்ரண்டீஸ் கடத்தல்காரர்கள் என விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடத்தியவர்கள் கோகுல் பயிலும் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களே. அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மாணவனின் தந்தை வசதியானவர் என்பதும் கடத்தினால் காசு பார்க்கலாம் என முடிவு செய்ததால் திட்டம்போட்டு கார் வைத்துக் கடத்தியதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 4 மாணவர்களிடமும் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவனைக் கடத்தி வைத்து 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சில மணி நேரத்திலேயே மாணவனை மீட்டு, கடத்தியவர்களைக் கைது செய்த போலீஸாரை உறவினர்கள் பாராட்டினர்.


Rs 3 crore ransomKidnap a friendCollege studentsCopsPaper notesசக நண்பனை கடத்தல்ரூ.3 கோடி பிணையத்தொகைகாகித நோட்டுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author