மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்
Updated on
1 min read

விருதுநகர்,

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மனைவி சகாயராணி (38). விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்திற்கு இன்று (திங்கள்கிழமை)மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். உடன் தனது மகனையும் அழைத்து வந்திருந்தார்.
இதைப் பார்த்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சகாயராணி கூறுகையில், "நான் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தற்போது மதுரை புதூரில் வசித்து வருகிறேன்.
சீனியாபுரத்தில் இருந்தபோது கடந்த 2008-ம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசித்த மாதவன், அவரது நண்பரான சாத்தூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் பணியாற்றி வரும் குமார் இருவரும் சேர்ந்து என்னிடம் 5 பவுன் நகையை அவர்களது அவசர செலவுக்காக வாங்கிச் சென்றனர்.

மேலும், மாதவனும் அவரது மனைவி ஜான்ஸிராணியும் சேர்ந்து ஒருபவுன் நகையும் ரூ.15 ஆயிரம் வாங்கினார்கள். ஆனால், நகையையும் பணத்தையும் திருப்பிக்கேட்டால் மூவரும் தர மறுக்கிறார்கள். கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மதுரை சரக டிஐஜி ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மனமுடைந்ததான் இன்று மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கொடுக்க வந்தேன்" என்றார்.
அதையடுத்து, சகாயராணியை விசாரணைக்காக போலீஸார் சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in