

என்.சன்னாசி
மதுரை
மதுரையில் சமீபகாலமாக முன் விரோதம் மற்றும் அற்ப காரணங் களுக்காக பழிக்குப் பழி யாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
கோயில் நகரமான மதுரை மாநகரம், ‘கொலை’ நகரம் என்ற பெயரை பெற்றுவிடுமோ என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு சமீபகாலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மதுரை காமராசர்புரத்தில் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர் களுக்கு இடையேயான முன்விரோ தத்தில் இதுவரை 12-க்கும் மேற்பட் டோர் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டுள்ளனர். யாகப்பா நகரில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டியில் இருதரப்பினருக்கு இடையே நடைபெறும்தகராறில் இது வரை 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், அவனியாபுரத் திலும் இருதரப்பின ரிடையே முன்விரோதம் காரணமாக கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த 7 மாதங்களில் மதுரை மாநகரில் மட்டும் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திமுக பிரமுகரின் மருமகன் வழக்கறிஞர் பாண்டி உட்பட 10 பேர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட் டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு வழக்கு தொடர்பாக ஜாமீன் கையெழுத்திட தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த அஜித் என்பவர் முன்விரோதம் காரண மாக வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.
இந்நிலையில், நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையே ஏற்படும் தகராறு, மோதலாக மாறி கொலையில் முடியும் போக்கும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜா படுகொலை செய்யப்பட்டார். சேவல் சண்டையின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களாக இருந்தவர்களே இக்கொலையை செய்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, சில அற்ப காரணங் களுக்காகவும் கொலைகள் நிகழ்கின்றன. கடந்த வாரம் மதிச்சியம் பகுதியில் பெண்ணை கேலி செய்த இளைஞரை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த சில நாட்களில் கிருஷ்ணாபுரம் பகுதியில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்த இளைஞர்களை தட்டிக்கேட்ட டீ கடைக்காரர் மாரிமுத்து என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது போன்று அடுத்தடுத்து நிகழும் கொலை சம்பவங்களால் மதுரை மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட் டுள்ளது. கடந்த 7 மாதங்களில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட் டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியதாவது:
மதுரை நகரில் ரவுடிகள், வழக்குகளில் சிக்கியோர் ஒருவரையொருவர் முன்பகையால் பழி தீர்த்துக்கொள்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், ஒன்றுமே இல்லாத சிறிய காரணங்களுக்காகவும் கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. மதிச்சியம், கரும்பாலை, காமராசர்புரம் போன்ற சில பகுதிகளில் பொதுஇடங்களில் தவறு செய்வோர் பற்றி காவல் நிலையங்களில் புகார் தருவதற்கே மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. குடித்துவிட்டு ரகளை செய்வோர், பொது இடங்களில் தகராறு செய்பவர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளை பட்டிய ட்டு போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.