Published : 25 Aug 2019 08:49 AM
Last Updated : 25 Aug 2019 08:49 AM

கொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார் ஓட்டுநர் கைது: கொலையாளி சிக்கியதன் பின்னணி

இரா.வினோத்

பெங்களூரு

கொல்கத்தா மாடல் அழகி பூஜா சிங்கை கொலை செய்ததாக பெங்களூருவை சேர்ந்த ஓலா கார் ஓட்டுநர் நாகேஷை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள கடராயப் பனஹள்ளி காட்டுப் பகுதியில் கடந்த 1-ம் தேதி ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப் பட்டது. இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் அவர் கொல்லப்பட்டிருந்தார். அவர் யார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இதனிடையே, அவரது முகத்தை பார்த்த போது, வட இந்தியா அல்லது வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவராக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படைப் போலீஸார் டெல்லி மற்றும் கொல்கத்தாவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி பூஜா சிங் (30) என்பவர் பெங்களூருவில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

அதில், கடந்த ஜூலை 30-ம் தேதி வேலை நிமித்தமாக பெங்களூரு சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படைப் போலீஸார், பூஜா சிங்கின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தனர். அதில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு செல்வதற்காக அவர் ஜூலை 31-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஓலா கார் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இதன்பேரில், அந்த காரின் ஓட்டுநர் நாகேஷை (22) பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், "சம்பவத்தன்று பூஜா சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டினேன். அவர் கொடுக்க மறுத்ததால் அவரை இரும்பு கம்பியால் தாக்கி கைப் பை, செல்போனை பறித்தேன். அவர் மயக்கம் அடைந்ததால் கடராயப்பனஹள்ளி காட்டுப்பகுதியில் அவரது உடலை வீசினேன்.

அப்போது, மயக்கம் தெளிந்து பூஜா சிங் சத்தம் போட்டார். இதனால், அவரை கத்தியால் 3 முறை குத்தி கொலை செய்தேன். பூஜா சிங் குறித்த தகவல்கள் கிடைக்காத அளவுக்கு எல்லா ஆதாரங்களையும் தீ வைத்து எரித்து விட்டேன்" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நாகேஷை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த பூஜா சிங்கின் 2 செல்போன்கள், தங்க மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், கைதான நாகேஷை பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x