

சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் வெடி விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட இடத்தில் பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு குடோன் இயங்கி வந்தது தெரியவந்தது.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (38). இவரது மனைவி ரேவதி. சாத்தூர் அருகே மேட்டமலையில் ரேவதிக்குச் சொந்தமான கட்டிடத்தில் எவ்வித அரசு அனுமதியும் உரிமமும் பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு குடோன் இயங்கியுள்ளது.
அங்கு பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சல்பர், கார்பன், நைட்ரேட், அலுமினியம் க்ளோரைடு, வெடி உப்பு மற்றும் கரித்தூள் போன்றவற்றை கள்ளச் சந்தையில் வாங்கி ரமேஷ் இருப்பு வைத்துள்ளார்.
உயர் ரக பேன்ஸி பட்டாசுகளை சட்ட விரோதமாக தயார் செய்து விற்பனை செய்ய ரமேஷ் திட்டமிட்டு அதற்கான மூலப்பொருட்களை குடோனில் வைத்திருந்துள்ளார்.
நேற்று தனது காரில் பட்டாசுக்கான மூலப்பொருள்களை ஏற்றிக்கொண்டு விஸ்வந்தத்தைச் சேர்ந்த தர்மர் என்பவருடன் மேட்டமலைக்கு வந்து காரிலிருந்த பட்டாசுக்கான மூலப்பொருள்களை குடோனில் இறக்கி வைத்துள்ளார்.
குடோனில் சிமெண்ட் தரை என்பதால் மருந்து மூட்டைகளை இழுத்துச்செல்லும்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டு ரமேஷும் தர்மரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும், வெடி தயாரிப்பதற்காக அங்கு வந்திருந்த கூலியாட்கள் விஜயபாண்டி, செல்லத்துரை, கருப்பசாமி ஆகியோரும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ரமேஷின் மனைவி ரேவதி மீது சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு எந்த வகையான பட்டாசு மூலப்பொருள்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன, அவர்களுக்கு கள்ளத்தனமாக பட்டாசுக்கான மூலப்பொருள்களை விற்றது யார் எனது குறித்தும் போலீஸார் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.