சென்னையில் போலீஸார் திடீர் ஆய்வு: 557 குற்றவாளிகள் மீது நடவடிக்கை 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை,

சென்னையில் இரவு ரோந்தினை தீவிரப்படுத்தவும் பழைய குற்றவாளிகள், குற்றப்பின்னணியில் உள்ள நபர்களைக் கண்டுபிடித்து விசாரிக்கவும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதிமன்றப் பிடியாணைகளை நிறைவேற்றவும் ஆணையர் உத்தரவுப்படி வடக்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 557 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் உத்தரவின்பேரில் வடக்கு மற்றும் மேற்கு மண்டல இணை ஆணையர்கள் வழிகாட்டுதலில் இப்பகுதியில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் சென்னை நகரின் 130 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்பட்டது. மேலும் 15 தங்கும் விடுதிகள் சோதனை செய்யப்பட்டன.

இது தவிர அனைத்து சந்தேகத்திற்கிடமான, குற்றம் நடைபெறும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களிலும் சிறிய குழுக்களாக காவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 41 பிடியாணைகள் (NB) நிறைவேற்றப்பட்டன, இது தவிர வாகனச் சோதனையில் உரிமம் இல்லாத 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 18 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள், கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 35 நபர்கள், செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட 43 நபர்கள், கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 15 நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 159 நபர்கள் மீது நன்னடத்தைக்கான குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளான 107, 109, 110-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பழைய குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 29 குற்றவாளிகளைக் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பொதுத் தொல்லை ஏற்படுத்திய 68 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர சந்தேகத்திற்கு இடமான விதத்தில் சுற்றித்திரிந்த 301 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தீவிர இரவு ரோந்தில் மொத்தம் 557 குற்றவாளிகள் - சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு போலீஸார் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in