

சென்னை
கொருக்குப்பேட்டையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது இருசக்கர வாகனம் நின்றுபோனதால் வேகமாக வந்த ரயில் அதன்மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த தாயும், பள்ளிச்சிறுமிகள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சுமதி (30). இவருக்கு 2 பெண் குழந்தைகள். தினமும் தனது இருசக்கர வாகனத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது சுமதியின் வழக்கம். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளத்தைக் கடந்துதான் சென்று விட வேண்டும்.
வழக்கம்போல் சுமதி இன்று தனது குழந்தைகள் இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். பொதுவாக ரயில்வே கிராசிங் வழியாக புறநகர் ரயில்கள், வெளியூர் ரயில்கள் சென்ட்ரல் கடந்து செல்லும். இதனால் அடிக்கடி லெவல் கிராசிங் கதவு மூடப்படும்.
ஆனாலும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் கதவு இடையே புகுந்து ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்வார்கள். இதில் பலர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இன்றும் சுமதி பள்ளிக்கு குழந்தையை அழைத்து வந்த நேரம் ரயில் வருவதால் லெவல் கிராசிங் மூடப்பட்டது.
இதையடுத்து வழக்கம்போல் ரயில்வே கேட் இடைவெளி வழியாக தனது இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் நுழைந்து தண்டவாளத்தைக் கடந்துள்ளார் சுமதி. அப்போது ஒரு தண்டவாளத்தில் சென்ட்ரல் நோக்கி சூலூர் பேட்டை - சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் வேகமாக வந்துள்ளது.
திடீரென ரயில் வருவதைப் பார்த்த சுமதி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் தண்டவாளத்தில் சிக்கி நின்றுவிட்டது. வேகமாக வரும் ரயில், ஸ்டார்ட் ஆகாமல் இருந்த இரு சக்கர வாகனம், அதில் அமர்ந்துள்ள இரண்டு குழந்தைகளின் உயிர் என சில நொடிகளில் சுமதி முடிவெடுக்கவேண்டிய நிலையில் இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வாகனத்தைவிட்டு ஓட நொடிப்பொழுதில் அவரது இருசக்கர வாகனத்தின்மீது ரயில் வேகமாக மோதியுள்ளது.
இதில் உருக்குலைந்த இருசக்கர வாகனம் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் சுமதியையும் இரு குழந்தைகளையும் ஆசுவாசப்படுத்தினர். ரயில் மோதிய வேகத்தில், ரயிலின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது.
பின்னர் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டு 45 நிமிடம் கழித்து ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாகச் சென்றன.
கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு அதிகப்படியான ரயில்கள் செல்வதால் பெரும்பாலான நேரங்களில் லெவல் கிராசிங் மூடியே இருக்கும். இதனால் காலை, மாலை பணிக்குச் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
சாவு ஊர்வலம் என்றாலும் லெவல் கிராசிங்கில் காத்துக்கிடக்கும் நிலைதான். இந்த இரண்டு லெவல் கிராசிங்கிலும் சுரங்கப் பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகாலமாக கேட்டும் யாரும் செவி சாய்க்கவில்லை. இதனால் முறையற்ற முறையில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தைக் கடப்பதால் விபத்தில் சிக்கி உயிரிழக்கு நிலை அடிக்கடி நடக்கிறது.
இப்பகுதியில் உடனடியாக சுரங்கப்பாலம் அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.