Published : 14 Aug 2019 06:40 PM
Last Updated : 14 Aug 2019 06:40 PM

திருடிய பைக்கில் காதலியுடன் சென்று செல்போன் வழிப்பறி: சிசிடிவி மூலம் சிக்கிய காதல் ஜோடி

சென்னை,

திருடிய மோட்டார் சைக்கிளில் காதலியுடன் சென்று சாலையில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சியை வைத்து போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, தேனாம்பேட்டை, பார்த்தசாரதி தெருவில் வசிப்பவர் பிரசன்னா லிப்சா (42). சென்னை நுங்கம்பாக்கத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி காலை 7-45 மணி அளவில் இவரும், இவரது தோழி ரோகிணியும் தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

வலது கையில் செல்போனை பிடித்தபடி தோழியுடன் பேசிக்கொண்டு பிரசன்னா லிப்சா நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களை ஒட்டி உரசியபடி பல்சர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் திடீரென லிப்சாவின் கையிலிருந்த செல்போனை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு அதே வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பறந்தார்.

அவருக்குப் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருக்க, பறித்த செல்போனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தபடியே மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சிறிது நேரத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பிரசன்ன லிப்சா புகார் அளித்தார். புகாரில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் பெண் என்றும், வாகனத்தை ஓட்டியவர் இளைஞராக இருந்தார் என்றும் பிரசன்ன லிப்சா கூறியிருந்தார்.

உடனடியாக தேனாம்பேட்டை போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இளம் ஜோடி ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்து லாவகமாக செல்போனைப் பறித்துச் செல்வது பதிவாகியிருந்தது.

வாகன எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அது திருடுபோன பைக் எனத் தெரியவந்தது. பின்னர் தொடர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் சூளைமேட்டைச் சேர்ந்த ராஜு(29) என்பதும் ஏற்கெனவே வடபழனி காவல் நிலையத்தில் பைக் திருட்டு வழக்கு அவர் மீது இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியான கல்லூரி மாணவியையும் கைது செய்தனர். தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இறுதியாண்டு மாணவியான அவருக்கு ஹாஸ்டல் கட்டணம் கட்டுவதற்காக செல்போனைத் திருடியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ராஜு தொழில்முறைத் திருடன் என்பதும் பைக் திருடி ஏற்கெனவே சிக்கியவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சனிக்கிழமை இரவு மற்றொரு மோட்டார் சைக்கிளைத் திருடி அதில் சென்று இரண்டு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x