

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக ‘அம்மா பேட்ரோல்’ (AMMA PATROL) எனும் பெயரில் புதிய ரோந்து வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருகிவரும் சூழலில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் அதிக கவனம் செலுத்திய மத்திய அரசு போக்ஸோ சட்டத்தைக் கடுமையாக்கியது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு என ஏடிஜிபி தலைமையில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது.
இதன் ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ரவி செயல்படுகிறார். இதற்கு மாவட்டந்தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே விசாரிக்கும்.
அதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசு இணைந்து இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளதாக காவல்துறை வாட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1098, மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1091 வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னையில் உள்ள பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பணியில் உள்ள 35 காவல் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த ரோந்து வாகனங்களை ஒப்படைக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஏற்கெனவே 'பிங்க் ரோந்து வாகனம்' (PINK PATROL) என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் அம்மா ரோந்து வாகனமாக இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் , அதேபோன்று வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள்ளது.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு எதிராக வரும் புகார்களை வழக்கமான சட்டம் ஒழுங்கு போலீஸார் இல்லாமல் அம்மா பேட்ரோலில் நியமிக்கப்பட்ட காவலர்கள் அம்மா பேட்ரோல் வாகனத்தில் உடனடியாக வந்து உதவுவார்கள்.
சென்னையில் முதற்கட்டமாகத் தொடங்கப்படும் இந்தத் திட்டம், விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.