Last Updated : 12 Aug, 2019 04:55 PM

 

Published : 12 Aug 2019 04:55 PM
Last Updated : 12 Aug 2019 04:55 PM

தூத்துக்குடியில் இறந்த தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகன்: போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் இறந்த தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியின் பிரதான சாலையில் உள்ள ஒரு குப்பை தொட்டியின் அருகே மூதாட்டியின் சடலம் கிடப்பதாக இன்று (திங்கள்கிழமை) காலை சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்தப் பெண் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன சுவாமி மனைவி வசந்தி (55) எனத் தெரியவந்தது.

இதையடுத்து அப்பெண்னின் மகன் முத்துலெட்சுமணன் (35) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். முத்து லெட்சுமணன் அப்பகுதியில் உள்ள சிறு கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.

விசாரணையின்போது, "எனது தாயார் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை. ஏற்கெனவே அவருக்கு சிகிச்சை அளிப்பது ரீதியாக வெளியில் ரூ.1 லட்சம் வரை கடனாகப் பெற்றுள்ளேன். இந்நிலையில் தாயின் இறுதிச் சடங்குக்கு என்னிடம் பணமில்லை. அதனால், சடலத்தை குளிப்பாட்டி போர்வையில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசினேன்" என்றார்.

ஆனால், அவர் கூறுவது உண்மையா? வேறு எதுவும் காரணம் உள்ளதா? என போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x