

கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியில் நடந்த இரட்டைக்கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவல் எடுத்து விசாரித்த 6 பேரிடம் விசாரணை முடியாததால் மேலும் ஒருநாள் காவலை நீட்டிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டியில் குள ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுநல வழக்கு தொடரக் காரணமாக இருந்ததாலும், ஆக்கிரமிப்புகளை அடையாளம் காட்டியதாலும், தந்தை வீரமலை (70), மகன் நல்லதம்பி (44) ஆகியோர் கடந்த ஜூலை 29-ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் சவுந்தரராஜன் என்கிற பெருமாள், சசிகுமார், பிரபாகரன், ஸ்டாலின், கவியரசன், சண்முகம் ஆகிய 6 பேர் கடந்த ஜூலை 31-ம் தேதி சரணடைந்தனர். கொலை தொடர்பாக மேற்கண்ட 6 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக குளித்தலை போலீஸார் 6 பேரையும் மதுரையிலிருந்து கடந்த ஆக. 8-ம் தேதி குளித்தலை அழைத்து வந்து குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன் ஆஜர்படுத்தினர். போலீஸார் விசாரணை நடத்துவதற்காக 5 நாள் காவல் கேட்ட நிலையில், மாஜிஸ்திரேட் 3 நாள் அனுமதி வழங்கினார்.
போலீஸ் விசாரணைக்கு வழங்கப்பட்ட 3 நாள் காவல் இன்று (திங்கள்கிழமை) முடிவடைந்த நிலையில் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன் மேற்கண்ட 6 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர். மேற்கண்ட 6 பேரிடம் விசாரணை முடியாததால் மேலும் 3 நாள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினார்.
மேலும் ஒருவர் கைது
குளித்தலை போலீஸார் மேற்கண்ட 6 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில், கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைக்க உதவிய திருச்சி மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வினோத்தை (22) குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் என்.சுகுமாறன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தார்.
குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன் வினோத்தை நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் வினோத் அடைக்கப்பட்டார்.
முதலைப்பட்டி கொலையில் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 6-ல் ஜூலை 31-ம் தேதி 6 பேர், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3-ல் சோனை என்கிற பிரவீண்குமார் (23) ஆக. 1-ம் தேதி என 7 பேர் சரணடைந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயகாந்தனை (23) குளித்தலை போலீஸார் கடந்த ஆக. 2-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் வினோத் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 7 பேர் சரணடைந்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.