

வேலூர்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (30), ராணுவ வீரரான இவர் நாகாலாந்து பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மகேஷ்குமாருக்கும், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த மாதம 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகேஷ்குமார் நேற்று காலை தனது மனைவி புவனேஸ்வரியுடன் இரு சக்கர வாகனத்தில் வேலூர் வழியாக ரங்காபுரம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள மேம்பாலம் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையேயான சண்டை அதிகரித்தது. அப்போது, மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கினர்.
அதன்பிறகும் 2 பேருக்கும் இடையே தகராறு அதிகமானது. இருவரும் கடும் வார்த்தைகளை கூறி சண்டையிட்டனர். இவர்களது சண்டையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபடியே சென்றனர்.
இதனால், மனமுடைந்த மகேஷ் குமார் கண் இமைக்கும் நேரத்தில் மேம்பாலம் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத புவனேஸ்வரி மேம்பாலம் மேலே இருந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று, மகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.