

நெல்லை மாவட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஜெ.எம்.-1 நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக 1996-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் உமா மகேஸ்வரி. நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு. உமா மகேஸ்வரி தன் கணவர் முருக சங்கரனுடன்நெல்லை அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 23-ம் தேதி உமா மகேஸ்வரி அவரது கணவர் முருகு சங்கர், வீட்டின் பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலை சம்பத்தில் வீடு அமைந்திருந்த பகுதியில் உள்ள உணவகத்திலும், தேவாலயத்திலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தின.
அந்தக் காட்சிகளில் சம்பவம் நடந்த நேரத்தில் வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிவதும், குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்திகேயன் கையில் பையுடன் நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை தனிப்படை அமைத்து விசாரித்துவந்த போலீஸார் சிபிசிஐடி வசம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் சங்கரன்கோயிலைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். 14 நாள் நீதிமன்றக் காவலில் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி போலீஸார் ஜெ.எம்.-1 நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குறைந்தது 7 நாட்களாவது விசாரிக்க போலீஸார் அனுமதி கோரியிருந்த நிலையில் 5 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.