

சென்னை
தனியார் ஓட்டலுக்குள் சென்று போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.60 லட்சம் ஹவாலா பணத்துடன் கேரள இளைஞர் பிடிபட்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் சுதந்திர தின பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை முன்னிட்டு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து போக்குவரத்து போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மண்ணடி பகுதியில் முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார், தங்கும் அறையுடன் உள்ள ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்து திடீர் சோதனை நடத்தினர். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த இலியாசர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.60 லட்சம் ஹவாலா பணம் இருந்தது. பணத்துக்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.
இதைத் தொடர்ந்து அந்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் இலியாசர் பணத்தை யாருக்காக கொண்டு வந்தார், அவரிடம் அவ்வளவு பணம் எப்படி வந்தது, எந்த நோக்கத்தை செயல்படுத்த அவ்வளவு பணத்துடன் தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார் என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.