Published : 03 Aug 2019 02:28 PM
Last Updated : 03 Aug 2019 02:28 PM

கல்லூரி மாணவியை கொலை செய்து வீட்டின் அருகே புதைப்பு; திருமணமான காதலன் உட்பட 3 பேர் கைது

உடுமலை

தாராபுரத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேக்கம் பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் முத்தரசி (19), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆத்துக்கால்புதூர் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் தெரிந்ததும், முத்தரசியை சொந்த ஊருக்கே குடும்பத்தினர் அழைத்து சென்று கல்லூரியில் சேர்த்தனர். இதற்கிடையே, தேக்கம்பட்டிக்கு பரத் அடிக்கடி சென்று, முத்தரசியுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென முத்தரசி மாயமானார்.

இதுதொடர்பாக அவரது சகோதரி தமிழரசி அளித்த புகாரின்பேரில், சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து, வேடசந்தூர் போலீஸார் பரத்தை தேடி வந்தனர். இந்நிலையில், தேக்கம்பட்டிக்கு லோடு ஏற்றி வந்த பரத்தை அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். முத்தரசி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதால், தாராபுரம் நல்லதங்காள் ஓடை அணைக்கு அருகே வரவைத்து கொலை செய்ததும், பின்னர், தாயார் லட்சுமி, ஓட்டுநர் குமார் ஆகியோருடன் சேர்ந்து வீட்டின் அருகே குழி தோண்டி சடலத்தை புதைத்ததும் தெரியவந்தது.

காட்டிக்கொடுத்த துர்நாற்றம்

இதற்கிடையே, தாராபுரத்தை அடுத்த வீராச்சி மங்கலத்தில், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட வானதி என்ற பெண்ணுடன் பரத்துக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்த வானதி, அங்கு துர்நாற்றம் வீசியதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது கணவர் உட்பட அனைவரும் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து பரத், வானதி இருவரையும் வீராச்சி மங்கலத்துக்கு தாயார் லட்சுமி அனுப்பியுள்ளார். பின்னர் லட்சுமி, அவரது கணவர், குடும்ப ஜோதிடர் குமாரசாமி ஆகிய மூவரும் சேர்ந்து, முத்தரசியின் சடலத்தை தோண்டி எடுத்து எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பரத் அளித்த தகவலின்பேரில், சடலத்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில், தாராபுரம் வட்டாட்சியர் முன்னிலையில் நேற்று தோண்டி ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால், அங்கு சடலம் கிடைக்கவில்லை. பரத்தின் தந்தை, குடும்ப ஜோதிடர் ஆகியோர் தலைமறைவாகி யுள்ளனர். இவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபட்டால், பல உண்மைகள் தெரியவரும். இந்த வழக்கில் பரத், அவரது தாயார் லட்சுமி, ஓட்டுநர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x