Published : 02 Aug 2019 06:23 PM
Last Updated : 02 Aug 2019 06:23 PM

காசிமேட்டில் மீன் வாங்கிவிட்டு கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது

சென்னை

காசிமேட்டில் மீன் வாங்கிவிட்டு கள்ள நோட்டுகளைக் கொடுத்த நபரை மீனவர் சாமர்த்தியமாக போலீஸிடம் பிடித்துக் கொடுத்துள்ளார். 

காசிமேடு, புதுமனை குப்பம் இரண்டாவது தெரு, மீன்பிடி துறைமுக ஏலம் விடும் பகுதியில் மொத்தமாக மீன் வியாபாரம் செய்து வருபவர் தேசப்பன் (50).  இவரிடம் இன்று அதிகாலை 4 மணியளவில்  கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த முனுசாமி (46)  என்பவர்  4 கூடை பாறை மீன்களை ஏலத்தில் எடுத்துள்ளார்.

மீன்களுக்கு உண்டான பணம் ரூபாய் 4,500-ஐ கொடுத்துள்ளார். ரூபாய் நோட்டுகளை வாங்கிய தேசப்பன் அதை எண்ணியபோது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நோட்டுகள் அமைப்பு கள்ளநோட்டுபோல் இருந்ததால் சோதித்துள்ளார். அதில் ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டு என தெரியவந்துள்ளது.

உடனடியாக கள்ள நோட்டு கொடுத்து மீன் வாங்க முயன்ற முனுசாமியை சாமர்த்தியமாகப் பேசி அமரவைத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்து போலீஸார் வந்து முனுசாமியைக் கைது செய்தனர்.

அவரை போலீஸார் சோதனையிட்டதில் அவரிடமிருந்து ரூபாய் 17 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புக்கு 35 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மீன் வியாபாரத்திற்காக  கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வரட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் கடந்த 31-ம் தேதி 16 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x