

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக உமாமகேஸ்வரியின் வீட்டில் போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்தனர்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் சங்கரன்கோயிலைச் சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் வழக்கில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசியல் பின்னணி இருப்பதாலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஆய்வாளர்கள் பிறைச்சந்திரன், உலகராணி ஆகியோர் தனிப்படை போலீஸாருடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போது இந்த 3 பேர் கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக எஸ்.பி .விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்ததும், அவர்கள் விசாரணையை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் கார்த்திகேயனை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளது.