

கொடைக்கானல் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் தனியார் உண்டு உறைவிடப் பள்ளியில் 10-ம் வகுப்பு ஏ பிரிவில் பயின்று வந்தார் ஓசூரைச் சேர்ந்த கபில் ராகவேந்திரா. அதே பள்ளியில் 10-ம் வகுப்பு பி பிரிவில் பயின்றுவந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கபில் ராகவேந்திராவை ஹரி கத்தரிக்கோலால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், கபில் ராகவேந்திரா சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் ஹரியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- பி.டி.ரவிச்சந்திரன்