

சென்னை
சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 28-ம் தேதி நள்ளிரவு அழைத்து பேசிய ஒரு நபர், ‘கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளது. அது 29-ம் தேதி (நேற்று) காலை வெடிக்கும்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தப்பட்டது. எந்த வெடிபொரு ளும் அங்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில், சேலையூர் பரா சக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த வினோத்குமார் (33) என்பவரது செல்போனில் இருந்து அந்த அழைப்பு வந்திருப்பது, சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
போலீஸார் வினோத்குமாரை பிடித்து விசாரித்தனர். முதல்வர் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை கைது செய்தனர்.