

சென்னை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் நகை, பணம் திருடு போனது. இதுகுறித்து அவரது மேலாளர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ப.சிதம்பரம் வீட்டில் பணிபுரிந்த விஜி, வெண்ணிலா ஆகிய 2 பெண்களை கைது செய்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விஜியின் மகன் மணிகண்டன், நகைகள் கொண்ட பை ஒன்றை தனது உறவினரான பாண்டிபஜாரைச் சேர்ந்த பார்வதியின் மகள் கவிதாவிடம் கொடுத்துள்ளார். கடந்த மாதம் நகை பையை மணிகண்டன் திருப்பிக் கேட்டபோது, வெறும் பையை கவிதா கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாண்டிபஜார் போலீ ஸில் மணிகண்டன் புகார் அளித்துள் ளார். மணிகண்டன் கொடுத்த பையில் இருந்த நகைகள், ப.சிதம்பரம் வீட்டில் திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். பார்வதியின் வீட்டில் சில நாட்களாக சோதனை நடத்தியுள்ளனர். பார்வதி, கவிதா உள்ளிட்டோரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பார்வதி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசா ரணையால் மனமுடைந்து பார்வதி தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.