

தி.நகரில் தனது வீட்டு முன் விளையாடிய வளர்ப்பு நாயை ஓட்டுநர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் சேர்ந்து கால்டாக்ஸியில் கடத்தியதாக உரிமையாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் வசிப்பவர், ஷரத் ரவி. இவர் தனியார் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். குட்டியாக இருக்கும்போதே 30 ஆயிரம் ரூபாய்வரை விலைபோகும் குட்டி அது.
கடந்த 4 ஆண்டுகளாக தன் வீட்டில் பிள்ளைப்போல் நாயை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு வெளியே நாய் விளையாடிக்கொண்டிருந்தது. பின்னர் இரவு 12 மணி அளவில் நாயை காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ரஹீம் என்பவர் வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதால் அவரிடம் கேட்டு சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்துள்ளனர்.
அந்தக்காட்சியில் வீட்டு வாசல்முன் கால்டாக்ஸி ஒன்று வந்து நின்றுள்ளது. காருக்குள் ஒரு பெண் இருந்துள்ளார். வெளியே கால்டாக்ஸி ஓட்டுனர் தரையில் அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து நாய் அங்கே வருகிறது. அதனுடன் விளையாடுகிறார். நாயும் விளையாடுகிறது.
திடீரென நாயைப்பிடித்து காருக்குள் தள்ளி கதவை சாத்துகிறார். பின்னர் நாயுடன் காரில் தப்பித்துச் செல்கின்றனர். நாய் கடத்தப்பட்டதை அறிந்துக்கொண்ட உரிமையாளர் பாண்டிபசார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்தும், காரின் பதிவு எண்ணை வைத்தும் போலீஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட நாயின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்குமேல் இருக்கும் என கூறுகின்றனர்.