

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் சங்கரன்கோயில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் அளித்த தகவலின்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரைப் பிடிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்று பேர் கொலையும்.. 3 தனிப்படைகளின் விசாரணையும்..
திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், அவர்களது வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ம் தேதி மதியம் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து 3 தனிப் படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் அணிந்திருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால் ஆதாயக் கொலை என மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர்.
காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி..
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஹோட்டல் சிசிடிவி காட்சியில் சந்தேகத்துக்கிடமான கார் நின்றது கண்டறியப்பட்டது.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர் வழியாகச் சென்ற அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, ஒரு செல்போன் எண்ணில் இருந்து நீண்ட நேரம் பேசியதும் தெரியவந்தது. அந்த கார் மற்றும் செல்போன் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்து விசாரித்ததில் அவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.
மதுரையில் சிக்கிய கார்த்திகேயன்..
இதையடுத்து, மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்த கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் பிடித்து திருநெல்வேலிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 பேர் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் முடிவுக்கு வந்தனர். கார்த்திகேயன் தொடர்ந்து முன்னுக்குக் பின் முரணாக பேசி வந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரின் உதவியோடு உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கூலிப்படையைச் சேர்ந்தவர்களை பிடிக்கவும், ஆயுதங்களை மீட்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாள் அளித்த பேட்டி..
முன்னதாக, உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாள் என்பவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி, மதுரை கூடல்நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீனியம்மாள், "நெல்லையில் இருந்து வந்திருந்த போலீஸார், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு தொடர்பாக என்னி டம் விசாரித்தனர். எனது செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். எனது கட்சியினர் ஓரிருவர் பேசியது பற்றி கேட்டனர். அவர்களைத் தொடர்ந்து, மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீஸாரும் என்னிடம் விசாரித்தனர்.
உமா மகேஸ்வரி, யாரிடமும் அதிகம் பேசமாட்டார். எனக்கும், அவரது கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல்நலமின்றி கடந்த 6 மாதங்களாக மகள் வீட்டில் இருந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறேன்.
திமுகவில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. எனது வளர்ச்சியை பிடிக்காதவர்களின் தூண்டுதலின் பேரில் என்னை சிக்க வைக்க பார்க்கின்றனர். எதையும் சட்டரீதியாக சந்திப்பேன்" எனப் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், அவரது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.