செய்திப்பிரிவு

Published : 27 Jul 2019 16:30 pm

Updated : : 27 Jul 2019 17:12 pm

 

குன்னூர் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை

farmer-murdered-in-coonoor
உயிரிழந்த விவசாயி பாலசுப்ரமணியம்

குன்னூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை உறவினர்கள் அடித்துக் கொலை செய்தனர். தலைமறைவான அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள மேல் ஒடையரட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம் (56).

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பசுவராஜ் என்பவருக்கும் 30 ஆண்டு காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததுள்ளது. இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை பாலசுப்ரமணியம் வழக்கம் போல் தனது தோட்டத்துக்குச் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பசுவராஜ், அவரது மனைவி குமாரி, மகன் சங்கர் ஆகியோர் திடீரென அங்கு சென்று பாலசுப்ரமணியம் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி, விவசாயப் பணிக்குப் பயன்படுத்தப்படும் இரும்புக் கருவியால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணியம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்துள்ளார். அருகே இருந்த தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

பாலசுப்ரமணியத்தைக் கொலை செய்த மூவரும் தலைமறைவாகி விட்டனர். கொலக்கம்பை போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

விவசாயி கொலை செய்யப்பட்டது கொலக்கொம்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.டி.சிவசங்கர்

CoonoorFarmerMurderகுன்னூர்விவசாயிகொலை

Popular Articles

You May Like

More From This Category

More From this Author