

கோவை
கோவை அருகே கார்-லாரி மோதிய விபத்தில் கேரளப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
கோவையை அடுத்த எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் உள்ள வெள்ளலூர் பிரிவில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதி முழுவதும் உடைந்து நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஓர் ஆணும், பெண்ணும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சூலூர் போலீஸார், காயமடைந்த மூன்று பேரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 3 வது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆனது.
சம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீஸார் கூறியதாவது:
"கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வாழப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (44). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தன்னுடன் பணியாற்றும் பெண் உட்பட 4 பேரை அழைத்துக்கொண்டு, கன்னியாகுமரி செல்வதற்கு கோவை வழியாக பயணம் செய்துள்ளார். உடன் பயணித்த நால்வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆவர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள ஸ்ரீராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் பேப்பர் பண்டல்களை ஏற்றி வரும் லாரியை எதிர்த்திசையில் ஓட்டி வந்துள்ளார். வெள்ளலூர் பிரிவு அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம்.
இவ்விபத்தில் பாலக்காடு வாழப்புழாவைச் சேர்ந்த முகமது பஷீர் (44), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஹிரலால் சிகாரி (28), கௌரங்க பண்டிட் (30), லலிதா மண்டல் (31), மிதுன் பண்டிட் (27) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது".
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.