செய்திப்பிரிவு

Published : 25 Jul 2019 14:53 pm

Updated : : 25 Jul 2019 15:03 pm

 

அமைச்சர் மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: இணையதள ஆசிரியர் கைது

minister-s-son-defamed-on-social-networks-online-journalist-arrested

அமைச்சர் சி.வி.சண்முகம் தன் மகன் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் திரித்து செய்தி வெளியிட்டதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் இணையதளம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் சென்னை திருவான்மியூரில் நள்ளிரவில் பழம் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவர் முழு போதையில் சொகுசுக் காரை ஓட்டிவந்து ஆட்டோ ஒன்றின் மீது மோதினார். அப்படியும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்று கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதினார். இதில் அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் காயமில்லை. காரை ஓட்டிவந்த தொழிலதிபர் நவீன் (30) மதுபோதையில் காவலர்களைத் தாக்கி தரக்குறைவாகத் திட்டினார். பின்னர் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் அந்தக் காணொலியில் இருக்கும் நபர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் எனக் கூறி சமூக வலைதளத்தில் சிலர் செய்தியைப் பரப்பினர். அதை உண்மை என நம்பி பலரும் பரப்பினர்.

கைது செய்யப்பட்ட நவீனுக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில் இதை உண்மை என நம்பி மற்றவர்களுக்கு ஷேர் செய்ததால் வீடியோ வைரலாகியது. இது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை கடந்த ஜூன் 26 அன்று நேரில் சந்தித்துப் புகார் அளித்தனர்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாகவும், இது போன்று பொய்யான வீடியோவை பதிவிட்ட நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் அமைச்சர் சண்முகம் புகார் அளித்தார். அதன் பேரில்  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் பிரிவிற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், ‘நாளைய தீர்ப்பு’ என்ற மாதமிரு முறை வெளியாகும் இதழின் ஆசிரியர், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலைச் சேர்ந்த செல்லபாண்டி (36) என்பவர் நடத்தி வரும் நாளைய தீர்ப்பு டிவி என்ற யூடியூப் சேனலில்  ‘அமைச்சரின் மகன் குடிபோதையில் போலீஸாருடன் ரகளை வீடியோ’ என்ற தலைப்பில் மேற்படி ஒரு வீடியோவைப் பதிவிட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், செல்லபாண்டி மேற்படி மாதமிருமுறை இதழை கடந்த 10 வருடங்களாக நடத்தி வருவதும், naalaiya theerpu.com என்ற இணையதளத்தை கடந்த 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.  naalaiya theerpu tv என்ற Youtube சேனலை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உருவாக்கி அதில் செய்திகளைப் பதிவிட்டு வந்த நிலையில், மேற்கண்ட தலைப்பில் கடந்த  ஜூன் 26 அன்று வீடியோ பதிவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவின், சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் செல்லபாண்டியை நேற்று மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்லபாண்டி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
 

Minister's son defamedSocial networksC.v.shanmugamOnline journalistCyber cell policeஅமைச்சர் மகன்மீது அவதூறுசி.வி.சண்முகம்யூடியூப்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author