

அமைந்தகரையில் கடத்தப்பட்ட மூன்றரை வயது சிறுமியின் பெற்றோர் காவல் ஆணையருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
கடந்த 18-ம் தேதி அமைந்தகரை பெண் மருத்துவரின் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணால் மூன்றரை வயது சிறுமி கடத்தப்பட்டார். குழந்தையை 6 மணி நேரத்தில் சென்னை போலீஸார் மீட்டனர். காவல் ஆணையரே நேரடியாக ஈடுபட்ட ஆப்ரேஷனில் பணிப்பெண்ணும், அவரது காதலரும் சிக்கினர்.
குழந்தையைப் பத்திரமாக மீட்ட போலீஸாரை பெற்றோரும், பொதுமக்களும் பாராட்டினர். தங்களது குழந்தை மீட்கப்பட்டதற்கு காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிக்க, அலுவலகம் வர அனுமதி கேட்டனர் பெற்றோர். இதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் சென்னை காவல் ஆணையரைச் சந்தித்து நன்றி சொல்ல ஆணையர் அலுவலகத்தில் நேரம் கேட்டிருந்தனர்.
தனியாக தனக்கு நன்றி சொல்ல வேண்டியது இல்லை என்று கூறிய காவல் ஆணையர் அந்த வழக்கில் பணியாற்றிய தனிப்படைகளில் பணியாற்றிய அனைத்து நிலை காவல்துறை அதிகாரிகளையும் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக மாற்றினார். குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து போலீஸாரும், ஊடகத்தினரும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய குழந்தையின் தந்தை, “எனது குழந்தைக்காக ஆன்லைன் ஆப் மூலம் பணிப்பெண்ணை வேலைக்கு எடுத்து அமர்த்தினேன். ஆதார் கார்டை செக் செய்துதான் வேலைக்கு அமர்த்தினேன். ஆனால் அவர் குழந்தையைக் கடத்திவிட்டார்.
பொதுவாக சினிமாவில்தான் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்துள்ளேன், நிஜத்தில் என் வாழ்க்கையில் நடந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. குழந்தை உயிருடன் கிடைப்பாளா? என பயமாக இருந்தது. ஆனால் போலீஸார் தைரியம் கொடுத்தனர்.
ஒரு பெரிய டீமே வேலை செய்து கண்டுபிடித்துக் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது, “இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், சென்னை காவல்துறை நவீன தொழில்நுட்பத்தைத் தனதாக்கிக் கொண்டதாலேயே இந்த வெற்றி சாத்தியமானது.
சிவப்பு கலர் காரில் குழந்தை கடத்தப்படும் சிசிடிவி காட்சிகளைச் சேகரிக்க சிசிடிவி தொழில்நுட்பம் பயன்பட்டது. கடத்தல்காரர்கள் இருக்குமிடத்தை அறிய சைபர் தொழில் நுட்பம் பயன்பட்டது, இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் காவல் எல்லைகள் குறித்து போலீஸார் யோசிக்காமல் அனைவரும் குழந்தையைக் கண்டுபிடிக்க வேண்டும், குற்றவாளியைப் பிடிக்கவேண்டும் என்று செயல்பட்டது சிறப்பு” எனப் பாராட்டினார்.