

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசலில் திமுக நிர்வாகி மர்ம கும்பலால் ஓடஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, குலையன்கரிசலைச் சேர்ந்தவர் கருணாகரன் (55). இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர். திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர். தூத்துக்குடி யூனியனில் முன்னாள் சேர்மனான இவர் தற்போது திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முத்தையாபுரத்தில் நகை அடகுக் கடை நடத்தி வந்தார். இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அங்குள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுவிட்டு கருணாகரன் வெளியே வரும் போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அதிர்ச்சியில் தப்பி ஓட முயன்றார். ஆனால், சரமாரியாக வெட்டியதில் கழுத்து, தலை, முகத்தில் கடுமையாக வெட்டுப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் புதுக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கருணாகரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் விசாரணை நடத்தினார்.
சமீபத்தில் குலையன்கரிசல் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் ஏற்பட்ட தகராறில் விவசாய சங்கத்தைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் பகை எதுவும் உள்ளதா? அல்லது அரசியல் முன் விரோதம் எதுவும் உள்ளதா? என விசாரணை நடக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா ராதாகிருஷ்ணனை விட்டு விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இவரது எதிரிகள் கட்சி பலம் இல்லை என்பதால் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக பிரமுகர் கொலை காரணமாக தூத்துக்குடி குலையன்கரிசலைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.