Published : 20 Jul 2019 04:47 PM
Last Updated : 20 Jul 2019 04:47 PM

வெளிநாடுகளில் வாடிக்கையாளர் தகவல்களைத் திருடி இந்தியாவில் போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருட்டு: 3 வெளிநாட்டினர் கைது

வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களை ஸ்கிம்மர் கருவிகள் மூலம் திரட்டி போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் இந்தியாவில் பணம் திருடிய 3 வெளிநாட்டவரை கண்ணகி நகர் போலீஸார் கைது செய்தனர்.

ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது மோசடி நபர்கள் அவர்கள் கார்டுக்கான தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடுவார்கள். அவ்வாறு திருடப்படும் தகவல்களை வைத்து போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து வேறு ஒரு இடத்தில் பணத்தை எடுத்துவிடுவார்கள்.

மறுபுறம் ஏடிஎம் அதிகாரி, வங்கி அதிகாரிபோல் பேசி ஏடிஎம் கார்டு தகவல்களைச் சேகரித்து அதன்மூலம் ஏடிஎம் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைப் பெற்று பணத்தை மொத்தமாக திருடும் கும்பல் என ஆன்லைன் சைபர் திருடர்களில் பலவகை உண்டு.

தமிழகத்தில் வாடிக்கையாளர் தகவல்களைத் திருடும் கும்பல் வடமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் அந்த கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துவிடுவார்கள். இதனால் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர் குழப்பமடைந்து விடுவார். யாரிடம் புகார் அளிப்பது என்பதும் தெரியாது.

போலீஸும் அவர்களைப் பிடிக்க முடியாது. எல்லைப் பிரச்சினை காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவார்கள். இதேபோன்று வெளிநாடுகளில் உள்ள திருடர்களும் இதே முறையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் விவரங்களைத் திருடி இந்தியா போன்ற நாடுகளில் ஏடிஎம் கார்டுகளை வைத்துப் பணத்தைத் திருடும் நடைமுறையை வைத்துள்ளனர்.

இவ்வாறு பணம் திருடும் ஒரு கும்பலை கண்ணகி நகர் ஆய்வாளர் வீரகுமார் தலைமையிலான போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள கிளப்புகளில் கார்டுகளின் தகவல்களை வெளிநாட்டினர் சிலர் திருட முயற்சிப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தபோது ஒரு வெளிநாட்டு நபர் சிக்கினார். பல்கேரிய நாட்டைச் சேர்ந்த நெக்கோலேய் என்ற அந்த நபரை விசாரித்தபோது பல தகவல்களைத் தெரிவித்தார். உடனடியாக அவரது கூட்டாளிகள் போரீஸ், லூயுஸ்பேமிர் ஆகியோரையும் போலீஸார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் அறையைச் சோதனையிட்டபோது, அறையில் 40-க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், ரூ.7.5 லட்சம் இந்தியப் பணம், 10,000 அமெரிக்க டாலர் பணம், ஸ்கிம்மர் மெஷின், லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் அவர்களை கைது செய்த கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் வீரகுமார் மூவரையும் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

 

ஆய்வாளர் வீரகுமாரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

''கிளப்புகள், மால்களில் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடும் நோக்கில் இவர்கள் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலில் இவர்களைக் கண்காணித்து வந்தோம். பின்னர் மூவரையும் பிடித்து அவர்கள் அறையைச் சோதித்தபோது அறையில் ஸ்கிம்மர் கருவிகள், வெளிநாட்டு கரன்சிகள், லேப்டாப், ஸ்கிம்மர் மெஷின் உள்ளிட்டவை சிக்கின.

இவர்கள் கூட்டமாகச் செயல்படுபவர்கள். இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க்கே இயங்குகிறது. வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடும் இவர்கள் இங்குள்ள ஆட்களுக்கு அதை அளிக்க இவர்கள் இங்கு போலி கார்டுகள் மூலம் பணத்தை எடுத்துவிடுவார்கள். அங்குள்ள வாடிக்கையாளர்கள் இந்தியர்கள் தமது பணத்தைத் திருடிவிட்டதாகக் கருதுவார்கள். ஆனால் நடப்பது இதுதான்.

இவர்கள் இங்குள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருட ஸ்கிம்மர் மிஷின் மூலம் முயற்சி எடுத்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய நெட்வொர்க் என்பதாலும், வெளிநாடு சம்பந்தப்பட்டது என்பதாலும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வசம் மூவரையும் ஒப்படைத்துவிட்டோம்”.

இவ்வாறு வீரகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x