

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவைக் கண்டித்து பார் உரிமையாளர் தீக்குளித்த புகாரில் மயிலாப்பூர் உதவி ஆணையர் குடியிருப்பில் வசிக்கும் காஞ்சி ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன். இவர் போலீஸார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி, கடந்த மே மாதம் 29-ம் தேதி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருவதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், திருப்போரூர், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர்கள் கண்ணன், பாண்டி உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதனிடையே, மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிகுமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுவை ஆயுதப்படைக்கும் மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மதுவிலக்கு ஏடிஎஸ்பி மாணிக்கவேல், டிஎஸ்பி சுப்புராஜ் வீடு மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமல் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் உள்ள டிஎஸ்பி சுப்புராஜ் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஎஸ்பி மாணிக்கவேல் குடியிருக்கும் மயிலாப்பூர் உதவி ஆணையர்கள் குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
டிஎஸ்பி சுப்புராஜ் மாமல்லபுரம் பார் உரிமையாளர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.