

சென்னையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட நவீன வரவுகள் பெரிதும் உதவுகின்றன. அதில் கண்கொத்தி பாம்பாக குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கை வகிக்கிறது.
சென்னையில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை அடுத்து கண்காணிப்பு கேமராவின் அவசியத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தினார். சென்னை முழுதும் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவிக்களை நிறுவ முயற்சி எடுத்தார். சக அதிகாரிகள் துணையுடன் சென்னை முழுதும் இதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தொழிலதிபர்கள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங்மால்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை, பொது இடங்கள், வழிபாட்டுத்தளங்கள் என சென்னை முழுதும் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர சென்னை முழுதும் சாலையோரம், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் சட்டம் ஒழுங்கு போலீஸாரும் சிசிடிவி கேமராக்களை அமைத்தனர்.
சென்னையில் செயின்பறிப்பு, செல்போன் பறிப்புகள் அதிகரித்து ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்தது. கல்லூரி மாணவர்கள், வேலையில்லாமல் சுற்றுபவர்கள், தொழில்முறை வழிப்பறி நபர்கள் என பலரும் இதில் இறங்கினர். 55 வயதில் முதன்முதலாக மளிகை கடை வைத்திருந்த நபரும் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
போலீஸார் கண்காணிப்பு கேமரா அமைத்ததும் வரிசையாக பலரும் சிக்கினர். எங்கெல்லாம் கண்காணிப்பு கேமரா இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை பிடித்தனர்.
விளைவு அதிகப்படியான நபர்கள் சிக்கினர். முதல்முறை குற்றம் செய்தவர்களும் சிக்கினர். எங்கு செயின் பறித்தாலும் செல்போன் பறித்தாலும் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இருக்கும் சிசிடிவி கேமராமூலம் சிக்கினர். இதனால் திடீரென அதிகப்படியாக நடந்த செயின்பறிப்பு, செல்போன் பறிப்புகள் திடீரென குறைந்தது.
சிசிடிவி கேமராக்களின் பணி சென்னையில் அபரிதமான ஒன்றாக மாறிப்போனது. குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட அஞ்சினர். மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டனர். கொலை சம்பவங்கள், வீடுபுகுந்து திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களும், போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டவர்களும், குடித்துவிட்டு போக்குவரத்து போலீஸாருக்கு ஒத்துழைக்காமல் தகராறு செய்பவர்களும் சிக்கினர்.
சில இடங்களில் போலீஸார் பொதுமக்களை தாக்கியும் சிக்கினர். ஒரு காவலர் ஒரு நபரை சிக்கவைக்க அவரது காரில் கஞ்சா வைத்தார், காரில் கஞ்சாவுடன் சிக்கியதாக வழக்குப்பதிவு செய்ய முயன்றபோது சிசிடிவி காட்சிகாவலர் செய்ததை காட்டிக்கொடுத்தது. சில நேரம் நல்ல செயல்களை செய்த காவலர்கள் பாராட்டப்பட்டனர்.
சமீபத்தில் ஒரு கொள்ளையன் வீடுபுகுந்து திருடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு பயணமாக அவனது நடமாட்டத்தை ஏரியாவாரியாக உள்ள சிசிடிவி காட்சிகள்மூலம் போலீஸார் எடுத்தனர். அதில் பாண்டிச்சேரி எல்லைவரை அவனது நடமாட்டத்தை போலீஸாரால் எடுக்க முடிந்தது. பாண்டிச்சேரியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் பிடிக்க முடியவில்லை.
ஆனால் இங்கு அவனது புகைப்படங்கள் சிக்கியதை பாண்டி போலீஸாரிடம் அளிக்க அவர்கள் அதை வைத்து அந்த நபரை பிடித்து ஒப்படைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை ஒன்றை நபர் ஒருவர் தூக்கிச் செல்ல அவரது அனைத்து நடமாட்டங்களும் எடுக்கப்பட அவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் செல்வது சிசிடிவி காட்சியில் கிடைத்தது.
இது ஊடகங்களில் வெளியானவுடன் அந்த நபர் குழந்தையை விட்டுவிட்டு தப்பி ஓடினார். குழந்தையை மீட்ட போலீஸார் மறுநாள் அந்த நபரை பிடித்தனர். கடந்த 15-ம் தேதி திருவல்லிக்கேணியில் பெண் ஒருவரை வீட்டுக்கு கடன் தொகை கேட்டுப் போனபோது கும்பல் ஒன்று கொன்று உடலை ஆட்டோவில் ஏற்றி திண்டிவனம் அருகே கிணற்றில் வீசிவிட்டு தப்பியது.
ஆனால் அந்தப்பெண் குறிப்பிட்ட வீட்டுக்கு செல்லும் சிசிடிவி பதிவு போலீஸார் கையில் சிக்கியதால் கொலையாளிகளை 24 மணி நேரத்தில் போலீஸார் பிடித்தனர். இன்று சென்னையில் குற்றச்செயலலில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது என்கிற நிலைக்கு சிசிடிவி கேமராக்களின் பணி உள்ளது.
இதேப்போன்று குற்றவாளிகளின் முகத்தை பதிவு செய்து அவர்கள் முகம் மீண்டும் எங்காவது பதிவானால் அவர்களைப்பற்றிய தகவலை உடனே அனுப்பும் நவீன செயலியுடன் கூடிய கேமராவும் தி.நகரில் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க போக்குவரத்துக்காக சிசிடிவி கேமராக்கள் பயன்படுகின்றன. இதன் நவீன வரவாக சமீபத்தில் காவல் ஆணையர் அண்ணா நகரில் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்தார். இவைகள் நவீனமானவை.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் நெம்பர் பிளேட்வரை படம் பிடித்து அனுப்பிவிடும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆன்லைனிலேயே அபராத ரசீது அனுப்பி வைக்கப்படுகிறது. சோதனை ஓட்டமாக இதை சோதித்தபோது ஒருநாளைக்கு 90 ஆயிரம் படங்கள்வரை எடுத்து தள்ளியிருக்கிறது.
தற்போது முதற்கட்டமாக அண்ணா நகர் பகுதியில் இத்தகைய கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது வருங்காலத்தில் சென்னை முழுதும் அமைக்கப்பட்டால், தாறுமாறாக வாகனத்தை ஓட்டுவது, சிக்னலில் மீறிச் செல்வது, ஹெல்மட் அணியாமல் செல்வது, சீட்பெல்ட் அணியாமல் செல்வது, போக்குவரத்து விதிமீறல் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.
நவீன வரவுகளின் முன்னேற்றம் இன்று காவல்துறையிலும் எதிரொலிக்கிறது. ஒரு காலத்தில் டூப்ளிகேட் பில்புக் அச்சடித்து பணம் வசூலித்து பாக்கெட்டில் போட்டதாக போக்குவரத்து போலீஸார்மீது புகார் எழுந்தது. ஆனால் இன்று கேஷ்லெஸ் என்கிற பணமில்லா முறைமூலம் கிரெடிட், டெபிட் கார்டுகள் அல்லது நாமே வேறு எங்காவது அபராதத்தை செலுத்தும் முறை வந்துவிட்டது.
இதேபோன்ற மற்றொரு வரவு செல்போன் இதன்மூலம் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவது குறித்து எழுதவேண்டுமானால் தனியாக ஒரு புத்தகம் போடும் அளவுக்கு பல சம்பவங்கள் உள்ளது. நவீன வரவுகளில் செல்போன் குற்றச்சம்பவங்களை கண்டறிய உதவுவதுகுறித்து அடுத்து பார்ப்போம்.