Published : 18 Jul 2019 03:28 PM
Last Updated : 18 Jul 2019 03:28 PM

கள்ளக்குறிச்சி அருகே கோர விபத்து; ஆம்னி பஸ்-வேன் மோதல்: 10 பேர் பலி, 6 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் ஆம்னி பேருந்தும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியானார்கள். 5 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஆம்னி பஸ் ஒன்று 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 3 மணி அளவில், கள்ளக்குறிச்சி ஏமப்பேரி அருகே அண்ணாநகர் பைபாஸ் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

தனியார் நிறுவனத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிக்கப் லோடு வேன் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வேகமாக வந்த பிக்கப் வேன் ஆம்னி பஸ் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் ஆம்னி பஸ் ஓட்டுநர் பக்கம் முழுதும் பலத்த சேதமடைந்தது. பிக்கம் வாகனம் உருக்குலைந்து போனது. இதில் ஆம்னி பஸ்

 ஓட்டுநர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்து மீது மோதியதால் தூக்கி வீசப்பட்ட பிக்கப் டிரக்கிலிருந்த ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து 8 பேர் உயிரிழந்தனர்.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்து வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 6 பேரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.

பிக்கப் டிரக் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வண்டியை வேகமாக ஓட்டிவந்து வலதுபுறம் சாலையில் ஏறி எதிரில் வந்த ஆம்னி பஸ் மீது மோதியதே  விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பிக்கப் டிரக்கில் பயணித்த தொழிலாளர்கள்  மதுரையைச் சேர்ந்த உயர்மின் கோபுர கட்டுமான ஒப்பந்ததாரரிடம் வேலை பார்த்து வந்தனர். சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் பிக்கப் டிரக்கில் வட மாநிலத் தொழிலாளர்களை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதும், தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதுமே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நெடுஞ்சாலையில் அதிகாலையில் 10 பேரை பலிவாங்கிய கோர விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x