Published : 18 Jul 2019 02:30 PM
Last Updated : 18 Jul 2019 02:57 PM
திருவல்லிக்கேணி ஜாம் பஜாரில், வட்டிக்குக் கடன் கொடுத்த பெண் பணம் கேட்டு வந்தபோது, அவரை அடித்துக் கொன்ற பெண், கணவர் மற்றும் நண்பர்கள் கிணற்றில் வீசினர். போலீஸார் விசாரணையில் 4 பேரும் சிக்கினர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இருதயநாதன்(50). இவர் கடந்த 1994-ல் சென்னை வந்து திருவல்லிக்கேணி பேகம் சாகிப் தெருவில் குடியேறினார். இவரது மனைவி அல்போன்ஸ் மேரி (43). இவர்களுக்குக் குழந்தை இல்லை.
இருதயநாதன் ஜாம் பஜாரில் ஒரு தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து வருகிறார். அல்போன்ஸ் மேரி மாலை நேரங்களில் வீட்டின் முன்பு இட்லி மாவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பகல் 12.30 மணியளவில் வீட்டில் இருந்து கடற்கரையில் உள்ள மீன் கடைக்குச் சென்ற அல்போன்ஸ் மேரி அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
மனைவியை பல இடங்களில் கணவர் இருதயநாதன் தேடியுள்ளார். தெரிந்தவர்கள் வீட்டிலும் விசாரித்துள்ளார். ஆனால் மறுநாளும் வீடு திரும்பாததால் மதியம் 3 மணி அளவில் தனது மனைவியைக் காணவில்லை என ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி 7 மணியளவில் காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலைய போலீஸார் ஒரு தகவலை அளித்தனர்.
அதில் மதுராந்தகம் சரகத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை அருகே பாழடைந்த கிணற்றில் பிளாஸ்டிக் கோணியில் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்ததாகவும், செங்கல்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கில் பிணத்தை வைத்துள்ளதாகவும் அது அல்போன்ஸ் மேரியின் உடலா என பார்த்துச் சொல்லுமாறும் கேட்டிருந்தனர்.
அது அல்போன்ஸ் மேரியின் உடல்தான் என உறுதியானது. கொல்லப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்தார். அவர் போட்டிருந்த நகைகள் எதுவும் அவர் உடலில் இல்லை.
சென்னையில் காணாமல் போனவர் எப்படி திண்டிவனத்தில் பிணமாக மிதக்கிறார் என போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட அல்போன்ஸ் மேரி தினசரி தண்டல் வட்டிக்குக் கொடுத்து, பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது.
மீன் வாங்கச் சென்ற அல்போன்ஸ் மேரி எப்படி பிணமாக கிணற்றில் வீசப்பட்டார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அல்போன்ஸ் கடைசியாக பேசிய போன் கால் லிஸ்ட் எடுத்தபோது வள்ளியின் போன் நம்பர் கிடைத்தது. வள்ளியிடம் கேட்டபோது போன் செய்தேன் ஆனால் அவர் வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனிடையே போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது அல்போன்ஸ் மேரி ராயப்பேட்டை வி.எம். இரண்டாவது தெருவில் வசிக்கும் வள்ளி வீட்டுக்குச் செல்வதும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததும் தெளிவானது.
அதன் பின் போலீஸார் முழுமையாக விசாரித்ததும் வள்ளி முழு உண்மையையும் கக்கியுள்ளார். அவர் கூறியதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளி அல்போன்ஸ் மேரியிடம் 20,000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார். அதே வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்த பழ வியாபாரி மணிகண்டன் என்பவர் 60,000 ரூபாய் வாங்கியுள்ளார். இவர்களிடம் தினமும் தண்டல் வசூல் செய்து வந்துள்ளார்.
வள்ளி மற்றும் மணிகண்டன் ஆகியோர் அல்போனஸ் மேரியிடம் வாங்கிய பணத்தை திரும்பக் கட்ட முடியவில்லை. இந்நிலையில் அல்போன்ஸ் மேரி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், வள்ளி கடந்த 15-ம் தேதி அன்று மதியம் அல்போன்ஸ் மேரிக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
வள்ளியின் வீட்டிற்கு வந்து பணத்தை அல்போன்ஸ் மேரி கேட்டுக் கொண்டிருந்த போது, வள்ளி வீட்டின் மாடியில் தங்கி இருந்த மணிகண்டனுக்கும் அல்போன்ஸ் மேரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் கைகலப்பாக மாற அல்போன்ஸ் மேரியைக் கீழே தள்ளி, மணிகண்டனின் மனைவி தேவி காலை பிடித்துக் கொண்டதாகவும், வள்ளி கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டதாகவும், மணிகண்டன் தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்த பின்னர் உடலை என்ன செய்வதன்று தெரியாமல், மணியின் நண்பர் சுரேஷ் என்பவரை வரவழைத்து, என்ன செய்வது என்று கேட்டுள்ளனர். அல்போன்ஸ் மேரியின் செயின் மற்றும் கம்மல் ஆகியவற்றைக் கழற்றிய அவர்கள், தவிடு சேகரிக்கும் பிளாஸ்டிக் கோணியில் கட்டிவிட்டு, முத்தையா தோட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக்கூறி ஆட்டோவை வாங்கி வந்துள்ளனர்.
3.30 மணியளவில் ஆட்டோவில் உடலை ஏற்றி மதுராந்தகம் தாண்டி ஜிஎஸ்டி சாலையோரமாக உள்ள கிணற்றில் வீசி விட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். பின்னர் எதுவும் நடக்காததுபோல் போலீஸார் கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளனர்.
மறுநாள் அல்போன்ஸ் மேரியின் உடலில் இருந்து எடுத்த தங்க நகைகளை அயனாவரத்தில் உள்ள ஒரு அடகு கடையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார் மணிகண்டன்.
இதையடுத்து போலீஸார் கொலையாளிகள் வி.எம். தெருவைச் சேர்ந்த பழவியாபாரி, மணிகண்டன்(32), அவரது மனைவி தேவி (31), அதே வீட்டில் வசிக்கும் வள்ளி (36), மணியின் நண்பர் ராயப்பேட்டை முத்தையா முதல் தெருவில் வசிக்கும் வெல்டர் சுரேஷ்(32) ஆகியோரைக் கைது செய்தனர்.
ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை நடந்து உடல் கிடைத்த 24 மணி நேரத்தில் போலீஸார் கொலையாளிகளைல் கைது செய்ததை மேலதிகாரிகள் பாராட்டினர்.