விழுப்புரம் நெடுஞ்சாலையில் திருநங்கை கொடூர கொலை: காரில் வந்த நபர்கள் வெறிச்செயல்?
விழுப்புரம் கூட் ரோட்டில் திருநங்கை ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு உடல் சாலையோரம் கிடந்தது. காரில் வந்த சில நபர்கள் கல்லால் தாக்கி கொன்று சாலையில் உடலை வீசிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர் உடல்நிலை மாற்றத்தால் திருநங்கையாக மாறினார். தனது பெயரை அபிராமி என மாற்றிக் கொண்டார்.. திருநங்கை அபிராமி (35) விழுப்புரம் அய்யன்கோவில்பட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அதிகாலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் அபிராமியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக திருநங்கைகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் காரில் வந்த மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.
திருநங்கை அபிராமியை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கை கொடூமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
