அறை நண்பர் தாக்கியதில் இளைஞர் மரணம்: ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளி; விமானத்தில் பறந்து கைது செய்த போலீஸார்

அறை நண்பர் தாக்கியதில் இளைஞர் மரணம்: ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளி; விமானத்தில் பறந்து கைது செய்த போலீஸார்
Updated on
1 min read

கிண்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அறை நண்பர் உதைத்ததில் இளைஞர் உயிரிழந்தார். ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளியை விமானத்தில் பறந்து சென்ற போலீஸார் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.

ஒடிசாவைச் சேர்ந்த யசோபந்தா மஜி (37) மற்றும் ஜெகநாத் ரவுத் (41) உட்பட நான்கு நண்பர்கள் எஸ்பிஐ வங்கியில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக கிண்டி பாரதி நகரில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இவர்களில் ஜெகநாத் ரவுத் நேற்று முன் தினம் இரவு அதிகமாகக் குடித்துவிட்டு அறைக்கு வந்துள்ளார். அப்போது அறையில் யசோபந்தா மஜிஅறையில் இருந்துள்ளார். அவர் போதையில் யசோபந்தா மஜியைச் சீண்டி தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் யசோபந்தா மஜி கோபமடைந்த நிலையில் போதையில் இருந்த ஜெகநாத் ரவூத்தைத் தாக்கியுள்ளார். போதையில் இருந்த ரவுத் சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் யசோபந்தா மஜி கோபமாக வெளியேறியுள்ளார். சிறிது நேரம் கழித்து மற்ற இரு நண்பர்கள் அறைக்குத் திரும்பினர்.

அறையில் ஜெகநாத் ரவுத் பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகநாத் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத்  தெரிவித்துள்ளனர்.

சந்தேக மரணம் என்பதால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெகநாத்தின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அவரது விலா எலும்புகள் நொறுங்கியதால் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்தது.

இதுதொடர்பாக கிண்டி போலீஸார் நடத்திய விசாரணையில் யசோபந்தா மஜி கோபத்தில் விலா எலும்புகளில் மிதித்தது தெரியவந்தது. ஜெகநாத் உயிரிழந்ததை அறிந்து அச்சத்தில் அவர் ஒடிசா தப்பிச் சென்றுள்ளார்.

இதையறிந்த கிண்டி போலீஸார் யசோபந்தா மஜி ரயிலில் ஒடிசா போவதற்குள் விமானத்தில் சென்று ரயில்வே ஸ்டேஷனிலேயே அவரை எதிர்கொண்டு மடக்கிப் பிடித்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in