

மதுராந்தகம் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களுக்கு மர்ம நபர்கள் தூவிச் சென்ற விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 50 புறாக்கள் நேற்று உயிரிழந்தன. இது தொடர்பாக படாளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் 200-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் வளர்த்து வந்த 30 புறாக்கள் திடீரென உயிரிழந்தன. அப்போது அவர் எங்காவது விஷம் கலந்த உணவை உண்டதால் இறந்திருக்கலாம் என்று நினைத்து, இது தொடர்பாக புகார் ஏதும் அளிக்காமல் இருந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை புறாக்களைக் கூண்டில் இருந்து திறந்துவிட்டபோது, வெளியே வந்து வாசலில் சிதறிக்கிடந்த இறையைக் கொத்தி தின்றன. அப்போது திடீரென 50-கும் மேற்பட்ட புறாக்கள் சிறிதுநேரத்தில் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன.
மர்ம நபர்களின் செயல்
சந்தேகத்தின்பேரில் புறாக்கள் உணவு கொத்தித் தின்ற இடத்தை மணிகண்டன் பார்வையிட்டபோது, யாரோ மர்ம நபர்கள் வீட்டு வாசலில் விஷம் கலந்த தானியங்களை தூவிவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் படாளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.