செய்திப்பிரிவு

Published : 17 Jul 2019 13:27 pm

Updated : : 17 Jul 2019 13:35 pm

 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு: கடத்திய நபரும் கைது

child-rescued-handed-over-to-parents-man-arrest

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயதுக் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்திய நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன் தினம் அதிகாலையில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த ராம்சிங்- நீலாவதி தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டது.

குழந்தை காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் குழந்தையை ரயில் நிலையத்தில் இருந்து தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகின.

அடையாளம் தெரியாத அவரைப் பிடிக்க வலை விரித்ததில் அவர் குழந்தையோடு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் சிசிடிவி காட்சிகளும் சிக்கின. இதனையடுத்து குழந்தையைக் கடத்திச் சென்றவர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? என தமிழ்நாடு ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அவர் குழந்தையைக் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியானதால் பயந்துபோன அந்த நபர் குழந்தையுடன் தான் இருந்தால் பொதுமக்களால் பிடிக்கப்படுவோம் என அஞ்சி, திருப்போரூர் பேருந்து நிலைய சாலையில் குழந்தையைக் கீழே இறக்கி விட்டு நைசாக நழுவி விட்டார்.

தனியே நின்ற குழந்தையைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் மீட்டு ரோந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரயில்வே போலீஸார் குழந்தையை சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இன்று காலை ரயில்வே டிஎஸ்பி முருகன் செய்தியாளர்கள் முன்னிலையில் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தார். குழந்தையைத் திரும்பப் பெற்ற ஒடிசா தம்பதியர் உருக்கமுடன் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி முருகன், ''கண்காணிப்பு கேமராவால் இது சாத்தியமானது. இனி கூடுதல் முயற்சியாக ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு கையில் பெற்றோர் மற்றும் அவசரகால உதவி எண்ணுடன் கூடிய பாதுகாப்பு அட்டை ஒட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே குழந்தையைக் கடத்தி திருப்போரூர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் விட்டுவிட்டு தப்பிச்சென்ற நபர் மீண்டும் சொந்த ஊருக்குத் தப்பிச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் ரயில்வே போலீஸார் வலை விரித்துக் காத்திருந்தனர்.

இதுகுறித்து அறியாத அந்த நபர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் கோபி ரெட்டி என்பதும், அவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ChildRescuedKidnapperArrestRly policeகுழந்தை கடத்தல்பெற்றோரிடம் ஒப்படைப்புகடத்திய நபர் கைது

Popular Articles

You May Like

More From This Category

More From this Author