Published : 16 Jul 2019 04:50 PM
Last Updated : 16 Jul 2019 04:56 PM
சென்னையில் 'வாவ்காயின்' மோசடியில் ஈடுபட்ட முக்கிய பெண் குற்றவாளி, வெளிநாடு தப்ப முயன்றபோது போலீஸார் கைது செய்தனர்.
பிட்காயின் மோசடிபோல் வாவ்காயின் மோசடி பலரை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளது. 'வாவ்காயின்' மோசடி ஹாங்காங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதலீடு செய்தால் பலமாதங்கள் கழித்து உங்கள் பணம் பல ஆயிரம் மடங்கு உயரும் என ஆசை காட்டி ஆட்களைப் பிடிப்பார்கள்.
இதில் பேராசைப்பட்டு சேரும் நபர்கள் தங்கள் சேமிப்பை, தங்கள் சொத்துகளை விற்று, கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். அந்தப்பணத்தை முதலீடு செய்த பின்னர் பலமாதங்கள் காத்திருந்து போய் கேட்கும்போது யாரிடம் முதலீடு செய்தார்களோ அவர்கள் மாயமாகி இருப்பார்கள்.
இவ்வாறு சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் சார்ந்த குற்றம் என்பதால் புகார்கள் பெரிதாக வெளிவருவதில்லை. சிலர் புகாரும் அளிப்பதில்லை. இவ்வாறு ஏமாற்றி வந்த ஒரு கும்பலை போலீஸார் தேடி வந்த நிலையில் அதன் தலைவி தற்போது சிக்கியுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு முகநூல் மூலம் மாதேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் வாவ்காயினில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என இந்திராணிக்கு ஆசை காட்டியுள்ளார். அதை நம்பி கடந்த 2018-ம் ஆண்டு ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை இந்திராணி தொடர்பு கொண்டார்.
மறுமுனையில் பேசிய நபர் தன்னை பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு எனக்கூறி அண்ணா நகரில் தங்கள் அலுவலகத்தில் நடைபெறும் வாவ் காயினில் முதலீடு செய்வது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க வாருங்கள். சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என ஆசை வார்த்தை கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து இந்திராணி கருத்தரங்கில் கலந்துகொண்டார். அதில் பேசிய பலரும் தாங்கள் சில மாதங்களில் 'வாவ்காயின்' மூலம் கோடீஸ்வரராகிவிட்டதாக நம்ப வைத்துள்ளனர். அதை நம்பி 17 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு என்ற பெண்ணிடம் இந்திராணி கொடுத்துள்ளார்.
3 வருடங்களில் 17 லட்சத்தை 17 கோடியாக தருகிறோம் என பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு இந்திராணியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது அண்ணன் ஆர்த்தி அண்ணாவரம், பணியாளர் கிளிண்டன் ஆகியோரும் உடனிருந்து இந்திராணியிடம் உறுதியளித்துள்ளனர்.
இடையில் சில மாதங்கள் கழித்து பணம் தேவைப்பட்டதால் அண்ணாநகரில் உள்ள அலுவலகத்துக்கு இந்திராணி சென்றுள்ளார். அங்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை. உடனே பத்மஜ் பொம்மி ரெட்டிக்கு போன் செய்தால் அவர் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. மற்ற 2 பேரின் செல்போன் எண்களையும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்திராணி, அண்ணா நகர் போலீஸில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் புகாரை வாங்காமல் இழுத்தடிக்கவே நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றார். அதன் பின்னர் போலீஸார் புகாரைப் பெற்று விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில், மேற்கண்ட கும்பல் 'வாவ்காயின்' மோசடி மூலம் ஏராளமானோரை ஏமாற்றி பலகோடி ரூபாய் பணத்தைப் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாத வகையில் அண்ணாநகர் போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் நேற்று அந்த கும்பலின் தலைவி பத்மஜ் பொம்மி்செட்டி சீனிவாசலு மலேசியா செல்ல முயன்றபோது குடியுரிமை அதிகாரிகள் பிடித்து அண்ணாநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பத்மஜிடம், போலீஸார் நடத்திய விசாரணையில், மலேசியாவிலும் வாவ் காயினில் முதலீடு என்ற பெயரில் மோசடி செய்யத் திட்டமிட்டிருந்ததும் அதற்காக கருத்தரங்கம் நடத்த மலேசியா செல்வதும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள ஆர்த்தி அண்ணாவரம், கிளிண்டன் இருவரையும் தேடி வருகின்றனர்.
பணத்தை முதலீடு செய்தால் பல மாதங்கள் கழித்து பல நூறு மடங்காக கிடைக்கும் போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி வெளியாகும் ஆன்லைன் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.