Published : 16 Jul 2019 12:55 PM
Last Updated : 16 Jul 2019 12:55 PM

நந்தனத்தில் கோர விபத்து: பேருந்தில் சிக்கி 2 பெண்கள் பலி: ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்ததால் விபரீதம் 

சென்னை

சென்னை நந்தனம்அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல், பயணித்த 3 பேர் பேருந்தில் சிக்கினர். இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது குறித்து போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் வாகன ஓட்டிகளின் அலட்சியம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் நந்தனம் அருகே போக்குவரத்து நெரிசல் மிக்க  அண்ணாசாலையில் பேருந்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23), மேற்கு கோதாவரி மாவட்டம் செங்கமரைச் சேர்ந்தவர் பவானி (23). இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி மென் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இவர்களுடன் பணியாற்றுபவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (23). இவர்கள் மூவரும் வேளச்சேரியில் தங்கியிருந்து எழும்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் சிவாவின் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் ஒன்றாகச் சென்றனர். சிவா, இரண்டு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ஹெல்மட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.

வேளச்சேரி நெடுஞ்சாலை சைதாப்பேட்டை வழியாக வந்தவர்கள், நந்தனம் வழியாக எழும்பூர் நோக்கி அண்ணாசாலையில் காலை 8.50 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மேற்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் A51 அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. வாகனத்தை அலட்சியமாக ஓட்டிச் சென்ற சிவா, பேருந்தை இடதுபுறமாக முந்திச் சென்றுள்ளார்.

அப்போது பேருந்தை ஒட்டி இருசக்கர வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. சிவா அந்த இருசக்கர வாகனத்துக்கும் பேருந்துக்கும் இடையில் வேகமாக புகுந்து முந்த முயன்றார். அப்போது இடதுபுறம் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது சிவாவின் மோட்டார் சைக்கிள் உரசியது. 

இதனால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சாலையில் சறுக்கி விழுந்தன. இடது புறம் சென்றுக்கொண்டிருந்த வாகன ஓட்டுனர் கீழே விழுந்தாலும் மோட்டார் சைக்கிளை சமாளித்து நிறுத்தினார். ஆனால் வலதுபுறம் உள்ளே புகுந்த  சிவாவும்,  இரண்டு பெண்களும் விழுந்ததில் மூன்றுபேருமே பேருந்தின் முன்புறம் சிக்கி சக்கரத்துக்குள் சிக்கினர்.

இதில்  இரண்டு பெண்களும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்துக்குள் சிக்கி  காயம் அடைந்த சிவா ராயப்பேட்டை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அலட்சியமாக 3 பேர் பயணம் செய்ததும், வேகமாகச் சென்றதும், பக்கத்தில் வரும் வாகனங்களைப் பற்றி கவலைப்படாமல் பேருந்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் புகுந்ததும் விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x