தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.5 கோடி வாங்கியதில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.பாஸ்கரன், இயக்குநர் சரவணன், வழக்கறிஞர் தியாக.காமராஜ் ஆகியோர் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் வல்லம் நெ.1 சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பங்குதாரராக இருந்த ஜெயஸ்ரீ ராமசாமி, சில காரணங்களால் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார்.
இதற்காக அவருக்கு ரூ.19 கோடி வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டோம். இதனிடையே, மருத்துவமனையில் கடந்தாண்டு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மருத்துவமனை பங்குதாரர்கள், மேலாளர் என 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை விவகாரத்தில் தலையிட்ட மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், பிரச்சினையை முடிக்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்கு மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், அந்தத் தொகையை தஞ்சாவூரில் உள்ள காவல் ஆய்வாளர் சுகுமாறனிடம் கொடுக்க வேண்டும் என்றும், பணம் தரவில்லையெனில் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாவீர்கள் என்றும் மிரட்டினார். இதனால், வேறு வழியின்றி காவல் ஆய்வாளர் சுகுமாறனிடம், ரொக்கம் மற்றும் காசோலையாக ரூ.5 கோடியை வழங்கினோம். ஆனால், எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவில்லை.
எனவே, எங்களைப்போல மற்ற யாரும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் ஏமாறக் கூடாது என்பதற்காக, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்தோம். இதன்படி, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் சுகுமாறனை கைது செய்துள்ளனர். ஆனால், இவ்வழக்கில் மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரிக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என கருதுகிறோம். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.