

திருவள்ளூர்: சட்டவிரோதமாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், திருவள்ளூர், செங்குன்றத்தில் தங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் உள்ளிட்ட போலீஸார் நேற்று அதிகாலை திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, செங்குன்றம் அருகே உள்ள கிராண்ட்லைன்- செல்வவிநாயகர் நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அதில் வேப்பம்பட்டு பகுதியில் வங்க தேசத்தைச் சேர்ந்த வாஸிம் அக்ரம் (24). எம்டி மசரூல்(20) கடந்த சில மாதங்களாக உரிய அனுமதியின்றி, கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் உரிய அனுமதியின்றி பெங்களூரு மற்றும் சென்னையில் ஏற்கெனவே பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
அதே போல். கிராண்ட்லைன் செல்வவிநாயகர் நகர் பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜோரூல் இஸ்லாமோ (36), சஹால் இஸ்லாம் (26), ஹேரல் இஸ்லாம்(31) ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக தங்கி, கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து, வாஸிம் அக்ரம், ஜோரூல் இஸ்லாமோ உள்ளிட்ட 5 பேரை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், செவ்வாப்பேட்டை மற்றும் செங்குன்றம் காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த செவ்வாப்பேட்டை மற்றும் செங்குன்றம் போலீஸார், வாஸிம் அக்ரம் உள்ளிட்ட 5 பேரை நேற்று கைது செய்து, திருவள்ளூர், பொன்னேரி ஜே.எம். நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி, சென்னை, புழல் சிறையில் அடைத்தனர்.