

கோவை: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க, கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 400 போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
கோவை மாவட்ட காவல் துறைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் இயங்குகின்றன. இங்கு படிக்கும் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கியும், கல்லூரியின் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்தும், மேன்ஷன்களில் தங்கியும் வகுப்புகளுக்குச் சென்று வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீஸார் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு்ள்ளன. அதன் ஒரு பகுதியாக, காவல் துறையினர் சார்பில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு விதிமீறல்கள் கண்டறியப்படுகின்றன.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில் கோவையில் இன்று (ஆக.22) மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதாவது, கோவில்பாளையம், சூலூர், செட்டிபாளையம் ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 30 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வெளியே தனியாக அறைகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன.
இந்த இடங்களில் மாவட்ட காவல் துறையின் காவலர்கள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். மூன்று கூடுதல் எஸ்.பிக்கள், மூன்று டி.எஸ்.பி.க்கள் ஆகியோர் தலைமையில் 10 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 400 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் மேற்கண்ட இடங்களில் இன்று சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் துறையினர் கூறும்போது, “சில மணிநேரங்கள் இச்சோதனை நடைபெற்றது. இச்சோதனையின்போது, கஞ்சா தொடர்பாக ஒரு வழக்கும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக இரண்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் 14 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் ஆவணங்கள் மற்றும் உரிமை விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகள், மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகள், அறைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
மேலும், போதைப்பொருள் விற்பனை, பதுக்கல் மற்றும் பயன்பாடு தொடர்பாக ஏதேனும் தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கோவை மாவட்ட காவல்துறையின் ‘நிழல்’ (NIZHAL) க்யூ ஆர்கோடு மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட காவல் துறையின் தொடர்பு எண்கள் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்” என்றனர்.