

சென்னை: புரசைவாக்கம், கந்தப்பா தெருவில் வசிப்பவர் தானிஷ் (27). இவர், நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம், வாலஸ் கார்டன் 3-வது தெருவில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானிஷ் உணவகத்தின் வரவு, செலவுகளை ஆய்வு செய்தார்.
பில் தொகையை மாற்றியும், உணவக க்யூஆர் குறியீடுக்கு பதிலாக, தனி நபர் க்யூஆர் குறியீடு மூலம் பில் பணம் பெறப்பட்டிருந்தது தெரிந்தது.
இது தொடர்பாக அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், உணவகத்தில் மேலாளராக பணி செய்து வந்த கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த முகமது பாரிஸ் ரகுமான் (26), சக ஊழியர்களான வேலூர் மாவட்டம் மேல்வழித் துணையாங்குப்பத்தைச் சேர்ந்த முகமது ஹனீப் (23), ராயன் அஹமத் (21), வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த பூபாலன் (23) ஆகியோர் உணவகத்தில் ரூ.24 லட்சத்துக்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.