

சிவமூர்த்தி, ஆதித்யா, ரித்திக்குமார், ஹரீஸ்
ஓசூர்: ஓசூரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் திமுக மாநில செயற்குழு உறுப்பினரின் மகன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் ராயக்கோட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அன்னை அரவிந்தர் நகரைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (54). இவர் ஓசூரில் தொழிலாளர் நலத்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிவமூர்த்தி வீட்டின் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது, அவ்வழியாக காரில் வந்த இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களை எடுக்கக் கோரி தொடர்ச்சியாக காரில் ஹாரன் அடித்துள்ளனர்.
அப்போது, சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன், இவரது 6 மாத குழந்தையுடன் மனைவி அம்சவேணி ஆகியோர் வீட்டிலிருந்து வெளியில் வந்து இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றனர்.
அப்போது காரை ஓட்டி வந்த இளைஞர்கள், சிவமூர்த்தியின் குடும்பத்தினருடன் தகராறு செய்தனர். அதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த இளைஞர் காரை வேகமாக ஓட்டி சிவமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மீதும் மோதினர். இதில் 4 பேரும் காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் சிவமூர்த்தி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஓசூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, ஓசூர் கும்பாரப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், தற்போதைய திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான சீனிவாசனின் மகன் ஆதித்யா(24) அவரது நண்பர்கள் ரித்திக்குமார்(19), ஹரீஸ்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.