

சென்னை: மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஸ்ட்புட் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை, வன்னியர் தெருவில் பாஸ்ட் புட் கடை செயல்படுகிறது. இந்த கடையில் கடந்த 20 நாட்களாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் பத்ரா(42) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்துவருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கடையில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம் அங்கு வந்த இளைஞர்கள், சுவையாக போட்டுத் தரும்படி கேட்டுள்ளனர்.
அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் மாஸ்டர் சஞ்சய் பத்ராவை சரமாரியாக தாக்கி கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டியதுடன், கொதிக்கும் எண்ணெய் கடாயில் தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.
உடனே அருகில் இருந்த சக ஊழியர்கள் சஞ்சய் பத்ராவை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பாஸ்ட்புட் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியது ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் (19), கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திருசெல்வம் (19) என்பது தெரிந்தது.
மற்றொரு நபர் 16 வயதுடைய சிறார். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் சஞ்சய், திருச்செல்வம் ஆகிய இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறாரை கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.